வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (15/09/2018)

கடைசி தொடர்பு:12:51 (15/09/2018)

``அப்பா அடிக்கும்.. போக மாட்டேன்!” - பூந்தமல்லியில் தவித்த குழந்தைகள் இப்போது...?

``ரெண்டு குழந்தைங்களுமே அன்புக்காக ஏங்கி நிக்குறாங்க தம்பி. யாருக்கு நம்ம அன்பு தேவைப்படுதோ. அவங்ககூடதானே தம்பி நாம இருக்கணும்”

திருவள்ளூரிலுள்ள அந்தக் குழந்தைகள் நலக் காப்பகத்திலிருந்து வந்த அழைப்பு நம் நெஞ்சைக் குளிர்வித்தது. ``வணக்கம் சார், ரித்திக் ரோஷனும் லோகேஷூம் இப்போ முகப்பேர்ல உள்ள கலைச்செல்வி கருணாலயத்துல இருக்கிறாங்க. பெரிய பையன் அங்கன்வாடிக்குப் போக ஆரம்பிச்சிட்டான். சின்னவன் நல்லாத் தேறி வந்துட்டு இருக்கிறான். பசங்க அங்க ஒரு குறையும் இல்லாம சந்தோஷமா இருக்கிறாங்க சார்” என்ற தகவல் கேட்டு மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. அதேவேளையில் குழந்தைகளைப் போய் நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலும் தொற்றிக்கொள்ள முகப்பேர் கிளம்பினோம். 

ரித்திக் ரோஷன், லோகேஷ்

ரித்திக் ரோஷன், லோகேஷ் இருவரும் கடந்த ஜூலை மாதம் தங்கள் பெற்றோர்களால் தனித்து விடப்பட்டவர்கள். பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் அவர் தந்தை இருவரையும் தனியாக விட முயன்றபோது ரித்திக் ரோஷன் தந்தையைக் கட்டிப் பிடித்து அழுதிருக்கிறான். அப்போது கையில் கிடைத்த எதையோ எடுத்து அவன் தலையில் அடிக்க வலியில் சுருண்டு விழுந்தவனின் தலையில் பலத்த வெட்டுக்காயம். லோகேஷ் பால்குடி மறவாத பச்சிளங்குழந்தை. அங்கு நடப்பது எதுவுமே புரியாமல் அண்ணனின் அழுகை கண்டு அவனும் அழுது துடித்திருக்கிறான். குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அந்த வழியாகச் சென்றவர்கள் பூந்தமல்லி காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் இருவரையும் மீட்டு சிகிச்சை கொடுத்து திருவள்ளூர் அரசுக் காப்பகத்தில் சேர்த்திருக்கிறார்கள். 

``குழந்தைகளை இங்கே ஒரு வாரம் வரைதான் வைத்திருக்க முடியும். அதற்குள்ளே அரசிடமிருந்து உத்தரவு வந்ததும் வேறு காப்பகத்துக்கு மாற்றிவிடுவோம். அப்படி மாற்றியதும் உங்களுக்குத் தகவல் தருகிறோம்” என்று அப்போதே காப்பகத்திலுள்ளவர்கள் சொன்னார்கள். இப்போது அவர்களிடமிருந்து தகவல் வந்ததும் முகப்பேரிலுள்ள கலைச்செல்வி கருணாலயத்துக்குச் சென்று இருவரையும் சந்தித்தோம். உள்ளே நுழைந்ததுமே ரித்திக் ரோஷன் ஓடிவந்து நம்மைக் கட்டி அணைத்துக்கொண்டான். கைகளை விரித்து மேலே தூக்கச் சொன்னவனை ஆனந்தமாய்த் தூக்கிக் கொஞ்சினேன். அந்த அறையின் ஓரத்தில் பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருந்த லோகேஷ் சிரித்துக்கொண்டே ஓடி வந்து கால்களை இறுகப் பற்றிக்கொண்டான். அண்ணன், தம்பி இருவருக்குள்ளுமே சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது. லோகேஷ் தன் அறையில் இருக்கும் பொம்மைகள் ஒவ்வொன்றையும் எடுத்துக் காண்பிக்கிறான். ரித்திக் ரோஷன் ரிங்கா ரிங்கா ரோஸஸ் பாடலைப் பாடிக் காண்பிக்கிறான். 

துலஜா அம்மாவோடு ரித்திக் ரோஷன்

``சின்ன பையன் இப்போதான் தம்பி அம்மா, அப்பான்னு மெள்ள மெள்ளப் பேச ஆரம்பிச்சிருக்கான். நல்ல சேட்டை. ஒரு இடத்துல அமைதியாவே இருக்க மாட்டான். துறுதுறுன்னு சுத்திட்டேதான் இருப்பான். அவனுக்குத் தனியா இருக்கிறதே பிடிக்காது. கூட யாராச்சும் ஒருத்தர் இருந்துட்டே இருக்கணும். அவன் அண்ணன் மேல நல்ல பாசம். அவன் அழுதா இவனும் அழுதிடுவான். உங்களை ஒருமுறைதான் நேர்ல பாத்திருக்காங்க. ஆனாலும் பாருங்க, நல்லா நியாபகம் வெச்சு ஒட்டிக்கிட்டாங்க. ரெண்டு பசங்களுக்குமே நியாபக சக்தி அதிகமா இருக்கு. ரெண்டு பசங்களும் முத்துக் கணக்கா இருக்குதுங்க. இப்புடி ரோட்டுல அநாதையா விட்டுட்டுப் போக பெத்தவங்களுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ தெரியல தம்பி. நீங்க பெரியவன்கிட்ட உன் அப்பா எங்கன்னு கேட்டுப்பாருங்களேன்” என்றதும், அவனிடம் பேச்சுக் கொடுத்தோம். ``அப்பா வேணாம். அப்பா அடிக்கும். அப்பாக்கிட்ட போக மாட்டேன்” எனச் சத்தம்போட்டு கத்திக்கொண்டே ஓடிவிட்டான். ``பாருங்க தம்பி இப்படித்தான் இந்தக் குழந்தைக்கு அப்பா பத்தின பயம் இருக்கு. இதுக்கு மேல அவனைப் பெத்தவங்களுக்கு வேற என்ன தண்டனை வேணும்” சொல்லிக்கொண்டே கண் கலங்குகிறார் இருவரையும் பராமரிக்கும் துலஜா அம்மா. 

சூர்யகலா அம்மாவோடு லோகேஷ்

``பெரியவனுக்குத் தலையில நல்ல அடிபட்டுருந்துச்சு. அவனுக்கு சர்ஜெரி முடிஞ்சு தையல் பிரிச்சிருக்கோம். இப்போ அடிபட்ட தடம்கூட தெரியாம நல்ல க்யூர் ஆகிட்டான். சின்னவன் இங்க வந்த பிறகுதான் டி.பி இருக்கிறது தெரிஞ்சது. ஆறு மாசத்துக்கு ட்ரீட்மென்ட் எடுக்கச் சொல்லியிருக்காங்க. தினமும் மூணு வேளை தவறாம மாத்திரை கொடுத்திடுவேன். மாத்திரை சாப்பிடுறதால காலைல எழுந்ததும் எனர்ஜி சிரப்ல ஆரம்பிச்சு, சாப்பாடு, பழங்கள்னு அவனுக்குத் தேவையான எல்லாத்தையும் பாத்துப் பாத்து கொடுக்கிறோம். சாப்பாடு மட்டும் மத்த குழந்தைகளைக் காட்டிலும் அவனுக்கு வேற விதமாக் கொடுக்கிறோம். மத்தபடி நாம என்ன சொன்னாலும் அவங்க ரெண்டு பேரும் கேட்டுப்பாங்க. யாராவது எதாச்சும் கொடுத்தாகூட என்கிட்ட கொண்டு வந்து கொடுத்திடுவான். என்னைய அங்க இங்கன்னு ஒரு பக்கமும் விட மாட்டான். முந்தானையப் புடிச்சிக்கிட்டு கூடவே திரியுவான். பெரியவன் அங்கன்வாடிக்குப் போக ஆரம்பிச்சிட்டான். காலையில அவன் வெளியில கிளம்பும்போது சின்னவனும் குடுகுடுன்னு ஓடிடுவான். ரெண்டு குழந்தைங்களுமே அன்புக்காக ஏங்கி நிக்குறாங்க தம்பி. யாருக்கு நம்ம அன்பு தேவைப்படுதோ. அவங்ககூடதானே தம்பி நாம இருக்கணும். அதான் இந்தப் புள்ளைங்களை பராமரிச்சிட்டு இங்கேயே இருந்திட்டேன்” கருணை பொங்க கூறும் சூர்யகலா அம்மாவின் முகத்தில் தாய்மை உணர்வு மேலோங்கி நிற்கிறது. 

குழந்தைகள் பூந்தமல்லி காவல்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டபோது

``அரசு இது மாதிரி பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காகவும் முதியோர்களுக்காகவும் நிறையவே பண்ணிட்டு இருக்கு. குழந்தைகளோட மருத்துவக் கண்காணிப்புல ஆரம்பிச்சு, அவங்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் கொடுக்கணும், எந்தப் பள்ளியில படிக்க வைக்கணும், ஊட்டச்சத்து முறை, உடுத்துறதுக்கு துணி மணின்னு ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்துப் பண்ணிட்டு இருக்கு. எங்க ஹோம்ல இப்போதைக்கு 28 குழந்தைங்க இருக்கிறாங்க. இந்தக் குழந்தைகள் எல்லோரும் பெற்றோர்களாலதான் கைவிடப்பட்டவங்க. ஆனா, இவங்களை அரசு கைவிட்டுடலை. இந்தக் குழந்தைங்களை எல்லாம் தனித்தனியா பராமரிக்கிறதுக்கு இருவரும், அவங்களோட மருத்துவம், கல்வி என மற்றதை கவனித்துக்கொள்ள ஒருவரும் எப்போதும் கூடவே இருக்கிறாங்க. எங்களுக்கு ரித்திக் ரோஷனோட அப்பாவையும் அம்மாவையும் பத்தின தகவல் எதுவும் தெரியாது. ஒருவேளை சீக்கிரமே அவங்க ரெண்டு பேரும் மனசு மாறினா அரசு ஒப்புதலோடு நாங்க அவங்க ரெண்டு பேரையும் அவங்ககிட்ட அனுப்பி வைப்போம்” என்கிறார் கலைச்செல்வி கருணாலயத்தின் இணைச் செயலாளர் ரஜினி தேவி. 

குழந்தைகள் காப்பகத்திலிருந்து வெளியே வரும்போது கலைச்செல்வி கருணாலயம் என்ற பலகை கண்ணில் தென்படுகிறது. இப்போது எனக்கு அது தெய்வம் குடியிருக்கும் ஆலயமாகத் தெரிகிறது. 


டிரெண்டிங் @ விகடன்