`மாணவர்களை ஏன் காக்கவைத்தீர்கள்?' - அண்ணா விழாவில் அதிகாரிகளிடம் கடுகடுத்த கலெக்டர்! | Collector warned officials for making students wait

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (15/09/2018)

கடைசி தொடர்பு:12:25 (15/09/2018)

`மாணவர்களை ஏன் காக்கவைத்தீர்கள்?' - அண்ணா விழாவில் அதிகாரிகளிடம் கடுகடுத்த கலெக்டர்!

பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு, மாவட்ட விளையாட்டுக் குழுமத்தின் சார்பில் ராமநாதபுரத்தில் நடத்தப்பட்ட சைக்கிள் போட்டி காலதாமதமாகத் தொடங்கியதால், மாணவர் ஒருவர் மயங்கிவிழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அண்ணா பிறந்தநாள் போட்டிக்காக காக்க வைக்கப்பட்ட மாணவர்கள் 

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த தினம், இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்மூலம் 13, 15, 17 வயதுடைய மாணவ- மாணவியருக்கான சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்கென, சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் திரண்டிருந்தனர். காலை 7 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதுடன், போட்டி தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே போட்டியாளர்கள் மைதானத்துக்கு வந்துவிட வேண்டும் என அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இதனால் மாணவ- மாணவியர், காலை 6 மணிக்கே விளையாட்டு மைதானத்துக்கு வந்து காத்திருந்தனர். ஆனால், 7 மணி ஆன பின்னரும் போட்டிகள் தொடங்கவில்லை. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கேட்டபோது, `கலெக்டர் வந்தவுடன் போட்டிகள் தொடங்கப்படும்' எனத் தெரிவித்துள்ளனர். நேரம் செல்லச்செல்ல மாணவர்கள் பசியால் வாடத் தொடங்கினர். மேலும், தாங்கள் காலாண்டு தேர்வு எழுதச் செல்லவேண்டியுள்ளதால், விரைவாகப் போட்டியைத் தொடங்குமாறு கோரினர்.

அண்ணா பிறந்தநாள் விழா சைக்கிள் போட்டியில் வென்ற மாணவர்கள்
 

இந்நிலையில், காலை 9 மணிக்கு சைக்கிள் போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விளையாட்டு மைதானத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம், மாணவர்கள் காலையில் இருந்து காத்துக் கிடப்பதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க் பால் ஜெயசீலனை அழைத்த ஆட்சியர், போட்டி தொடங்கும் நேரம்குறித்து ஏன் தனக்கு முன்னதாகத் தகவல் சொல்லவில்லை என்றும், மாணவர்களைக் காக்கவைத்தது ஏன் எனவும் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தார். மேலும், போட்டியில் பங்கேற்பவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த குடிநீரைப் பருகிப் பார்த்தார் ஆட்சியர். அது, தரமற்ற குடிநீராக இருந்தது கண்டும் எரிச்சலடைந்தார். பின்னர், ஒருவழியாக சைக்கிள் போட்டிகள் தொடங்கப்பட்டது. இந்தப் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில், போட்டியில் பங்கேற்ற 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன் என்பவர், திடீரென மயங்கிவிழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் நவீனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உதவினர். பேரறிஞர் பிறந்தநாளில் பெயரளவுக்கு விழா நடத்த நினைக்கும் இதுபோன்ற அதிகாரிகளால், ஏதும் அறியா மாணவர்கள் பசியுடன் அவதிக்குள்ளாவதற்கு எப்போது தீர்வு கிடைக்குமோ என பெற்றோர்கள் ஆதங்கப்பட்டனர்.