கூட்டத்தில் மனைவியுடன் சிக்கிய விஜய்! ரசிகர்கள்மீது போலீஸ் தடியடி

நடிகர் விஜய் பங்கேற்ற திருமண விழாவில் ரசிகர்கள் கலாட்டாவில் ஈடுபட்டதால்,  மண்டப நாற்காலிகள் சூறையாடப்பட்டன.

விஜய்

நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்தியத் தலைவர், ஆனந்து. புதுச்சேரியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான இவரது மகள் திருமண வரவேற்பு விழா, புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் சங்கமித்திரா மகாலில் நேற்று மாலை நடந்தது. அந்த விழாவில், நடிகர் விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். அவர்களைக் காண, தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலிருந்தும் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டதால், திருமண மண்டபம் நிரம்பிவழிந்தது. மேலும், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

ரசிகர்கள்

ஒருகட்டத்தில், ரசிகர்கள் அனைவரும் ஆர்வ மிகுதியால் ஒரே நேரத்தில் மேடைக்கு வர முயன்றதால், கடும் தள்ளுமுல்லு மற்றும் கலாட்டா ஏற்பட்டது. அதனால், அங்கிருந்த நாற்காலிகள் ரசிகர்களால் சூறையாடப்பட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீஸார், விஜய் மற்றும் அவரது மனைவியை மண்டபத்திலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்ற முயன்றனர். அப்போது, நெரிசலில் விஜய்யும், அவரது மனைவியும்  சிக்கிக்கொண்டனர்.

கலாட்டா

தொடர்ந்து நடந்த ரசிகர்களின் கலாட்டா காரணமாக, அவர்களை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்த போலீஸார், விஜய்யின் காரை அனுப்பிவைத்தனர். அதன் பிறகு, மண்டபத்தில் சாப்பாட்டுக் கூடத்திலும், தாம்பூலம் பெறும் இடத்திலும் ரசிகர்களிடையே அடிதடி ஏற்பட்டது. அதனால் அந்தப் பகுதியே போர்க்களம்போல காட்சியளித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!