`இரஞ்சித்திடம் இதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன்'- மனைவி அனிதா நெகிழ்ச்சி! | pa.ranjith is truly a feminist, says his wife anitha

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (15/09/2018)

கடைசி தொடர்பு:12:50 (15/09/2018)

`இரஞ்சித்திடம் இதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன்'- மனைவி அனிதா நெகிழ்ச்சி!

பா.இரஞ்சித் படங்களில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அவர் இயக்கிய சில படங்களிலே ஒரு பெண்ணியவாதியாக முத்திரை குத்தப்பட்டார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ''என் தைரியத்துக்குக் காரணம் மனைவி அனிதா'' எனப் புகழ்ந்தார். திரையுலகில், பெண்களின் பிரச்னைகளை ஆழமாகக் காண்பிக்கும் இரஞ்சித், வீட்டில் எப்படி? அவர் மனைவியிடம் கேட்க, புன்னகையுடன் நெகிழ ஆரம்பிக்கிறார்.

இரஞ்சித்

``இரஞ்சித் படங்களில் பெண்ணியம் அதிகம் பேசப்படுகிறதே, என்ன காரணம் என என்னிடமே நிறையப் பேர் கேட்டுவிட்டனர். இதற்கு, அவர் வளர்ந்த விதமும் இயல்பான குணமும்தான் காரணம். சிலர் வெளியுலகத்தில் பெண்ணியத்துக்காகக் கொடிபிடித்துவிட்டு வீட்டில் தரக்குறைவாக நடத்துவர். ஆனால், தன் அம்மா, மகள் மகிழினி, எனக்கு என எல்லாச் சூழலிலும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். பிடிக்காத ஒரு செயலைச் செய்ய வற்புறுத்தியது கிடையாது. பெண்கள் தைரியமாகவும் துணிச்சலுடனும் இருப்பதையே விரும்புவார். படங்களில் பெண்களை அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் காட்டுவதற்கு, ஒருவர் பெண்ணியவாதியாக மட்டும் இருந்தால் போதாது. பெண்களின் உணர்வுகளை முழுமையாகப் புரிந்துகொண்டவராகவும் இருப்பது அவசியம். அதை இரஞ்சித்திடம் நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அதைத் திரைப்படங்கள் வாயிலாக மற்றவர்களும் உணர்கிறார்கள். ஆண் பெண் பாகுபாடின்றி எல்லோரையும் மரியாதையுடன் நடத்துவது அவரின் இயல்பு. அதைப் படங்களிலும் பிரதிபலிக்கிறார். பெண்ணியத்தைக் காட்டுவதற்கு தனி உழைப்பு எதுவும் போட்டதில்லை. அதனாலேயே அவரின்  படங்கள் இயல்பாக இருக்கிறது'' என்றார் அனிதா.