சுத்தப்படுத்தப்பட்ட அண்ணா இல்லம்! - முதல்வரைப் பெருமைப்படுத்தும் டிஜிட்டல் பேனர்கள்

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 110 வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக காஞ்சிபுரம் வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

அண்ணா நினைவு இல்லம்

முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் 110 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க எனத் திராவிட பாரம்பர்யம் கொண்ட கட்சிகள் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை காஞ்சிபுரம் வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலில் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க இருக்கிறார். இதற்காக அண்ணா இல்லத்தைத் தூய்மைப்படுத்தி, பெயின்ட் அடித்து வைத்திருக்கிறார்கள். அதன் பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் பழனிசாமி 34.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைக்கிறார். மேலும் 7064 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். அதைத் தொடர்ந்து 32.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார். 
மாவட்ட ஆட்சியர் வருவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டடங்களுக்கு பெயின்ட் அடித்து வைத்திருக்கிறார்கள்.

காஞ்சிபுரம் முதல்வர் பழனிசாமி பேனர்கள்

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். காஞ்சிபுரத்திலிருந்து திருப்பதி, வேலூர், பெங்களூர் என ஊர்களுக்குச் செல்லும் முக்கியச் சாலையில் மேடை அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நத்தைபோல் ஊர்ந்து செல்கின்றன. சாலைகளில் நடக்க முடியாதவாறு, முதல்வர் பழனிசாமியை வாழ்த்தி வழியெங்கும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியுடன் சாலையைக் கடந்து செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!