வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (15/09/2018)

கடைசி தொடர்பு:12:26 (15/09/2018)

சென்னை வாலிபருடன் காதல் திருமணம்... நள்ளிரவில் நடுரோட்டில் சுற்றித்திரிந்த அமெரிக்கப் பெண் 

சென்னை வாலிபரைக் காதலித்து திருமணம் செய்த அமெரிக்கப் பெண், நள்ளிரவில் நடுரோட்டில் அரைநிர்வாணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க பெண்

File Photo

சென்னை வேளச்சேரி பகுதியில் நள்ளிரவில் நடுரோட்டில் அரைநிர்வாணத்தில் வெளிநாட்டு இளம்பெண் சுற்றித் திரிவதாக வேளச்சேரி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீஸார், அங்கு விரைந்து சென்றனர். பெண் போலீஸார் உதவியுடன் அந்தப் பெண் மீட்கப்பட்டார். அவரிடம் ஆங்கிலத்தில் போலீஸார் விசாரித்தனர். ஆனால், அவரோ எந்தத் தகவலையும் முழுமையாகத் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் குறித்த விவரங்களை போலீஸாரால் சேகரிக்க முடியவில்லை. 

 இதைடுத்து, போலீஸார் பனையூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அவரை ஒப்படைத்தனர். பிறகு, அவர் குறித்த தகவல்களை போலீஸார் சேகரித்தனர். அப்போது அந்தப் பெண்ணின் பெயர் கெலா, வயது 26, அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்ற தகவல் மட்டும் போலீஸாருக்குக் கிடைத்தது. அவரிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. இதையடுத்து, போலீஸார் அமெரிக்கத் தூதரகத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தூதரக அதிகாரிகள், கெலாவிடம் விசாரித்தனர். அப்போது அவர், `சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த விமல் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தேன். அதன்பிறகு தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை' என்று கூறினார். 

இதையடுத்து அமெரிக்காவில் உள்ள கெலாவின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கெலாவையும் அமெரிக்காவுக்கு தூதரக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். கெலாவைக் காதலித்து திருமணம் செய்த விமல் குறித்து வேளச்சேரி போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``விமலுக்கும் கெலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அது உறுதிசெய்யப்படவில்லை. சம்பவத்தன்று கெலா, காஞ்சிபுரத்தில் ரகளை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விமலிடம் விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும்'' என்றனர். 

``கெலாவை பத்திரமாக மீட்டு, அமெரிக்கத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டதால் விபரீத சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை'' என்று தெரிவித்தார் போலீஸ் அதிகாரி ஒருவர்.