`அந்தக் காவலரை சாதாரண உடை அணிந்து நிழலில் அமர்ந்து பணியாற்றச் சொல்லுங்கள்!’ - பேரறிஞர் அண்ணா

`அந்தக் காவலரை சாதாரண உடை அணிந்து நிழலில் அமர்ந்து பணியாற்றச் சொல்லுங்கள்!’ - பேரறிஞர் அண்ணா

யல், இசை, நாடகம் என முத்துறைக்கும் மூத்த குடிமகனாகப் பெயரெடுத்து உலகலாவிய உயர்ந்த குடிகளின் மனதில் இன்றும் வாழ்ந்துவரும் பெருந்தகையாளர் `அண்ணா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கும் (காஞ்சிபுரம் நடராஜன்) கா.ந.அண்ணாதுரை அவர்களின் 110-வது பிறந்த தினம், இன்று.

அண்ணா

இலக்கிய அன்பர்களோடு இயைந்து அரசியல், திரைப்படம், நாடகம் என அண்ணா பதித்த தடங்களை அனைத்துத் துறை மக்களும் அவரவர் பங்குக்குப் பற்பல கட்டுரைகளை எழுதித் தள்ளுவார்கள். வாஞ்சையோடு வாரி அணைத்து மகிழும் இவரின் வரலாற்றை எத்தனை முறை புரட்டினாலும் அதன் வடிவமோ வகையோ மாறாது. ஆகையால், அண்ணாதுரையின் நினைவுகளில் அழியா பொக்கிஷமாக விளங்கிய சில சம்பவங்களை, அவர் சந்தித்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை சற்றே நாமும் சந்திப்போமா...

முத்திரை விநாடி:

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த  கா.ந.அண்ணாதுரை, அலுவலகத்தில் கிளர்க்காக, பள்ளி ஆசிரியராக, பத்திரிகையாளராகப் பணியாற்றி, பிறகு அரசியல்வாதியாகப் பரிணமித்தவர். எதிரில் உள்ளவர்களை எளிதில் வசியப்படுத்தும் பேச்சாற்றல், இவரை ஊடகம் வழியே அரசியலுக்கு அழைத்து வந்தது. திராவிட அரசியல் களத்தில் தன் வாழ்வையே அற்பணித்து மக்களை தன்பால் ஈர்த்த சமயம் அது.

மேடையில் இவர் பேசும் பேச்சைக் கேட்க எண்ணிலா மக்கள் குவிவர். இவரின் பேச்சு, மக்களை இவர்முன் மண்டியிடவைத்தது. கால நேரம் பார்க்காது கருத்தை கவனத்தில் வைப்பது பார்வையாளர்களுக்கு மிகுந்த பரவசத்தைத் தந்தது. அரசியல் ஆட்டத்தின் ஆகச்சிறந்த மேடை நிகழ்ச்சிகளில் அண்ணாவின் உரையும் ஒன்று. அப்படி ஓர் அரசியல் கூட்டத்தில் அண்ணா உரையாற்ற வேண்டும். ஆனால், காலமோ களைப்பின் விளிம்பில் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது. இருப்பினும், தமிழ்பால்... அதைப் பேசும் தலைவன்பால் பற்றுகொண்ட மக்கள், அண்ணாவின் பேச்சைக் கேட்கக் காத்திருந்தனர்.

`அடடா... காலம் கடந்துவிட்டதே! மக்களைக் கவரும்வண்ணம் பேசுவதைவிட, மக்களை மகிழ்விக்கும் வகையில் அதேசமயம் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் பேசவேண்டுமே!' என எண்ணிய அண்ணா, தன் வார்த்தைகளை மல்லிகைச் சரமாகத் தொடுக்கத் தொடங்கினார். அவரின் வார்த்தை வாசம் அனைவரையும் மயக்கியது. அவர் அப்படி என்ன பேசினார்...
``மாதமோ சித்திரை...
மணியோ பத்தரை
உங்களைத் தழுவுவதோ நித்திரை
மறக்காது இடுவீர் எனக்கு முத்திரை'' என்று மட்டுமே கூறிவிட்டு தன் உரையை முடித்துக்கொண்டார். முத்திரை வரிகளை செவிகுளிரக் கேட்ட மக்கள், இவ்வளவு நேரம் காத்திருந்ததன் பலனை அடைந்ததாக எண்ணி, களிகொண்டு அவரைக் கொண்டாடினர்.
 
அடைமொழியில் அழகுபார்ப்பார்:

தோளோடு தோள் இணைந்து களப்பணியாற்றும் அனைவரையும் அன்புடன் அரவணைத்துக்கொள்வது அண்ணாவின் தனி பாணி. தன் அதிகாரத்தின்கீழ் பணிசெய்வோரிடம்கூட சகோதரத்துவத்துடன் உறவாடக்கூடியவர். உடன்பிறவா சகோதரர்களின் தனித்திறமையின் அடிப்படையில் ஒவ்வொருவரையும் அடைமொழி வைத்து அழைப்பது இவருக்குக் கைவந்த கலை. பேராசிரியர், சொல்லின் செல்வர், நாவலர், கலைஞர், சிந்தனைச் சிற்பி எனச் செல்லப்பெயரிட்டு அழைப்பதில் அண்ணாவுக்கு அளப்பறிய திருப்தி.  

மொழி ஆற்றல்:

உலகளாவிய தலைவராக விளங்கிய அண்ணா அந்நிய மொழியைக்கூட அதன் ஆற்றல் மேம்படப் பயன்படுத்துவதில் அதீத திறமைகொண்டவர். ஆம், அண்ணாவுக்கு தமிழ் மொழியில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் சரளமாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றல் உண்டு. இதற்கு, இங்கிலாந்து கூட்டத்தில் அண்ணா ஆற்றிய அந்த உரையே இன்றும் சாட்சியாக விளங்குகிறது. திராவிட இனத்தின் ஆகப்பெரிய அடையாளமாக விளங்கும் அண்ணா அவர்களின் தோற்றத்தைப் பார்த்துத் தவறாக எண்ணிவிட்ட அந்நிய தேசத்து அறிவாளிகள், அண்ணாவின் ஆங்கில அறிவைப் பரிசோதிக்கும்வண்ணம் `Because' என்ற இணைப்புச் சொல்லை மூன்று முறை பயன்படுத்தி ஆங்கில வார்த்தை ஒன்று அமைக்குமாறு கேட்டனர். உருவத்தில் சிறிதானாலும் உரை நிகழ்த்துவதில் தான் அறிஞர் என்பதை நிரூபிக்கத் தொடங்கினார் அண்ணா. ``No sentence ends with because. because, because is conjunction" என்று பதிலளித்து தன்னை அறிவாளி என எண்ணிக்கொண்ட அயலாரின் வாயை வார்த்தைகளால் அடைத்தார்.

மனித மாண்பாளர்:

பிறரையும் தன்னைப்போல எண்ணுவதில் தனித்துத் தெரிபவர் அறிஞர் அண்ணா. முதலமைச்சர் நாற்காலியை முழுமையாக அழகுபடுத்திய காலகட்டம் அது. இவரின் பாதுகாப்பு கருதி வீட்டுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் காவல் பணியில் இருந்தார். அதைக் கண்ட அண்ணா, பணி காலம் முழுவதும் இப்படி விறைப்பாக ஒருவர் நிற்பது என்னுள் இருக்கும் மனிதத்தை மங்கச் செய்கிறது. அப்படி நிற்கும் அவரும் மனிதர்தான்'' என்று கூறி தன் பாதுகாப்புக்காக இருந்த காவலரை ``வேண்டாம்'' எனக் கூறினார்.

ஆனால், அண்ணா சொல்லிக்கொடுத்த கண்ணியத்தையே முதன்மையாகக்கொண்டு கடமையாற்றி வந்த காவல் துறையினரோ, `` இது உங்கள் பாதுகாப்பின் அடைப்படையில் அரசு செய்துள்ள ஏற்பாடு. தாங்கள் அவர்பால்கொண்ட அன்புக்கும் அரவணைப்புக்கும் காவல் துறை மிகுந்த பெருமைகொள்கிறது. இதை நாங்கள் வெறும் கடமையாக ஆற்றவில்லை... எங்களையும் எங்கள் மாநிலத்தையும் காக்கும் சென்னை மாகாண முதலமைச்சருக்குக் காவல் துறையினர் செய்யும் சிறு தொண்டாக, இந்தப் பணியை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் என்றும் பெருமையே தவிர, எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் சிரமப்படவில்லை. ஆதலால், தங்களின் வேண்டுகோளை ஏற்க முடியாது'' என பதிலுரைத்தார் உயர் அதிகாரி ஒருவர்.

தான் வெளிப்படுத்தும் அன்பு தனக்கே பாதுகாப்பாக விளங்கும்போது என்ன செய்வது என யோசித்தவாறு, ``சரி, அந்தக் காவலரை சாதாரண உடையில் நிழல் பொதிந்த இடத்தில் அமர்ந்தபடி பணியாற்றச் சொல்லுங்கள்'' என்றார் தாயுள்ளத்தோடு தரணியை ஆண்ட அந்தத் தலைவர்.

வேண்டாம் பகட்டு:

மக்கள் தலைவனாக வலம்வந்த இவர், என்றைக்குமே தான் அழகு மிளிர இருக்க நினைத்ததில்லை. மனித வாழ்வை அழகுபடுத்துவது அவரின் சிந்தனையே தவிர, புற அழகு அல்ல என்பதை ஆணித்தரமாகக்கொண்டவர் அறிஞர் அண்ணா. துவைத்த வேட்டி-சட்டையோ, எண்ணெய் பொதிந்த சிகை அலங்காரமோ, கண்ணாடியைப் பார்த்து முகத்துக்கு மெருகேற்றிக்கொள்வதோ, பகட்டு வாழ்க்கையின் அடையாளமான மோதிரம், செயின், கைக்கடிகாரம்  போன்றவற்றை அணிந்துகொள்வதோ எதையுமே அண்ணா விரும்புவதில்லை. ஒரு சட்டையை இரண்டு நாள்களுக்கும்மேல் அணிவார். பின்னாளில் தமிழக முதலமைச்சர் ஆசனத்தை அழகுபடுத்தவேண்டிதான் `பளிச் சட்டை' அணியத் தொடங்கினார்.

புத்தகப் பிரியர்:

அச்சு பொதிந்த எந்த ஒரு தாளையும் விட்டுவைக்க மாட்டார் அண்ணா. அது, அதிக விலையுடைய புத்தகமாக இருந்தாலும் சரி, மார்க்கெட்டில் மலிவு விலையில்  விற்கும் புத்தகமாக இருந்தாலும் சரி. புத்தகத்துக்கும் அதில் இருக்கும் கருத்துகளுக்கும் மிகுந்த மரியாதை அளிக்கும் அற்புத அறிஞன் அண்ணா. சென்னை, யுனிவர்ஸல் புக் ஷாப் மற்றும் ஹிக்கின் பாதாம்ஸ் போன்ற கடைகளில் விற்பனையாகும் அனைத்து மொழிப் புத்தகங்களையும் வாங்கி, வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் வரலாற்றுக் கருத்துகளைத் தெரிந்துகொள்வதில் அலாதி பிரியம்கொண்டவர். இப்படி அதிகப் புத்தகம் வாங்கி, படித்து மகிழ்வதில் மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையாருக்கும் அண்ணாவுக்கும் மிகப்பெரிய போட்டி நிலவிய நாள்களும் உண்டு.  

அண்ணா

இப்படி அண்ணாவின் வாழ்க்கையில் பொதிந்த அற்புதத் தருணங்கள் ஏராளம். அவை அத்துணையையும் இங்கு அணிவகுக்க வைப்பதென்றால், இந்த அத்தியாயம் போதாது. ஆகவே, அவரின் பிறந்த நாளான இன்று, அவரின் வாழ்க்கையில் வலம்வந்த வண்ணமிகு நிகழ்ச்சிகளை ஒரு வரி தொகுப்பாகப் படிப்போமா...

1909  - தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் பிறந்தார்

1930 - தன்  21-வது வயதில்  ராணியை மணம் முடித்தார்.

1934  - சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

1935  - ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தார்.

1938  - காஞ்சியில் நடை பெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டார்.

1944  - நீதிக்கட்சி `திராவிடர் கழகம்' எனப் பெயர் மாற்றம் செய்தார்.

1949  - திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார்.

1967  - சென்னையின் முதலமைச்சரானார்.

1969  - சென்னை அரசு `தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்தார்.

1969  - பிப்ரவரி 3-ம் தேதி உலக வாழ்விலிருந்து ஓய்வுபெற்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!