வெளியிடப்பட்ட நேரம்: 13:47 (15/09/2018)

கடைசி தொடர்பு:14:33 (15/09/2018)

வேலைவாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றம்!- கொள்ளையர்களாக மாறிய 4 இன்ஜினீயரிங் மாணவர்கள்

மோசடி

சென்னையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியவரைத் தாக்கிய இன்ஜினீயரிங் மாணவர்கள், கொள்ளையர்களாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. 60 வயதான இவர், ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கடந்த 3-ம் தேதி புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், தன்னுடைய வீட்டின் பூட்டை உடைத்து 21 சவரன் நகைகள், 7,000 ரூபாய் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில், மடிப்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கொள்ளைகுறித்து விசாரித்தனர். அப்போது, வீட்டில் பூட்டு எதுவும் உடைக்கப்படவில்லை. இதனால் வெங்கடாசலபதி மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். தொடர்ந்து, வெங்கடாசலபதி கூறிய தகவல்கள் போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``புதுச்சேரியைச் சேர்ந்த இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்  அஜய்குமார், அமிர்தராஜ், பரணிகுமார், திவாகர், மனோகர் ஆகியோர் ஃபேஸ்புக் மூலம் வெங்கடாசலபதிக்கு அறிமுகமாகியுள்ளனர். அவர்களிடம், வேலைவாங்கித் தருவதாக வெங்கடாசலபதி ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதை மாணவர்களும் நம்பியுள்ளனர். கடந்த 3-ம் தேதி சென்னை வந்த மாணவர்கள், வெங்கடாசலபதியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். வேலை தொடர்பாகப் பேசிய வெங்கடாசலபதியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்துள்ளது. மேலும், மாணவர்களை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதனால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்ததோடு ஆத்திரமடைந்துள்ளனர். இதையடுத்து, வெங்கடாசலபதியைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பிறகு, வீட்டிலிருந்த 21 சவரன் நகைகள், 7,000 ரூபாய், செல்போன் ஆகியவற்றைத் திருடினர். அதோடு விடாமல், வெங்கடாசலபதியின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி 17,000 ரூபாயையும் எடுத்துள்ளனர். அதன்பிறகு, மாணவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். பணம், நகைகளைப் பறிகொடுத்த வெங்கடாசலபதி, நடந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி, கொள்ளை நடந்ததாக எங்களிடம் பொய்ப் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, நான்கு மாணவர்களையும் கைதுசெய்துள்ளோம். அவர்களிடமிருந்து நகை, பணம், செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.