வெளியிடப்பட்ட நேரம்: 14:19 (15/09/2018)

கடைசி தொடர்பு:14:19 (15/09/2018)

கழிவறை நீரைச் சுத்திகரித்து, விவசாயத்துக்குப் பயன்படுத்தும் மஞ்சக்குடிப் பள்ளி!

கழிவறை நீரைச் சுத்திகரித்து, விவசாயத்துக்குப் பயன்படுத்தும் மஞ்சக்குடிப் பள்ளி!

``நாம் வாழும் இந்தச் சூழலைக் காக்க, நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் உந்துதலிலே இந்தத் திட்டத்தைத் தொடங்கினோம்'' என மென்மையான குரலில் வரவேற்கிறார், தயானந்தா பள்ளியின் தலைமை ஆசிரியர், கே.பாஸ்கரன். 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது, மஞ்சக்குடி கிராமம். அங்குள்ள டி..டி நரசிம்மன் சுவாமி தயானந்தா மேல்நிலைப் பள்ளியை இன்று தமிழகம் முழுதும் அறிந்துகொள்ளும் விதமாக மாற்றியிருக்கிறது அந்தத் திட்டம். இயற்கைக்குப் பயன்படும் வகையில் கழிவுநீரைச் சுத்திகரித்து மறுபயன்பாட்டுக்குப் பயன்படுத்தும் திட்டம். 

பள்ளி

``தமிழகத்திலேயே இங்குதான் முதன்முறையாக இந்தச் செயல்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 40 லட்சம் செலவில் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், வீட்டுக் கழிவுகள், விஷ வாயு இல்லாத தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தலாம். இந்தத் திட்டத்தை  Decentralised waste water treatment system அல்லது  vortex DEWATS என்பர். இந்தச் செயல்பாட்டில் எந்தவித இயந்திரங்களும் பயன்படுத்தப்படுவதில்லை. புவியீர்ப்பு சக்திதான் ஆற்றல் மூலம். பல்வேறு படிநிலைகளைக் கடந்து நன்னீர் கிடைக்கிறது. முதல் நிலையில், திடக்கழிவுகளும் திரவக்கழிவுகளும் தனியாகப் பிரிக்கப்படும். இதற்கு 2 மணி நேரம்தான் ஆகும். இந்த நிலையிலேயே 30 சதவிகிதம் மாசுகள் நீக்கப்பட்டுவிடும். இந்தத் திடக்கழிவுகள் படிந்து உரமாக மாறும். இவற்றை விவசாய நிலத்துக்குப் பயன்படுத்தலாம்.

அடுத்த படிநிலை, Baffled Tank என்பது. கழிவுகளை அங்குள்ள சிறு அறைகள் போன்ற அமைப்புகளுக்குக் கொண்டுசெல்கிறது. இது நிகழ ஒருநாள் முழுவதுமாக தேவைப்படும். இந்தப் படிநிலையில் 80 சதவிகித மாசுகள் நீக்கப்படும். மூன்றாவது படிநிலை, அந்தக் கழிவுகள் வடிக்கட்டப்படுவது. இதற்கு 20 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். 90 சதவிகிதம் மாசுக்கள் நீங்கி தூய்மையான நீர் கிடைக்கும். எனினும், துர்நாற்றம் இருக்கும். அடுத்ததாக, சூழல் அமைப்பு (vortex dewats) என்ற படிநிலையில், இயற்கை முறையில் காற்றினை உட்செலுத்திச் சுத்திகரிக்கப்படும். இந்த அமைப்பில் பயன்படும் குழாய், செங்குத்தாகப் பொருத்தப்பட்டிருக்கும். இதன் அடிப்பாகம் புனல் வடிவில் இருக்கும். இங்கு 98 % மாசுகள் நீக்கப்படும். நீரின் துர்நாற்றமும் நீங்கி, மீண்டும் பயன்படுத்தும் வண்ணம் கிடைக்கும். இந்த நீரை நேரடியாக விவசாய நிலங்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்கியுள்ளோம்'' என்கிறார் பாஸ்கரன்.

பள்ளி

``இதன் மற்றொரு சிறப்பு, மேப்பில் இ.எம் -1 சேர்க்கிறோம். இ.எம் என்பது, திறன்மிகு நுண்ணுயிரியைக் குறிக்கும். இந்தியாவில் மேப்பில் இ.எம் என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படும் இது, ஜப்பான் நாட்டின் ரிகியாஸ் பல்கலைக்கழக முனைவரான டேரோஹிகா என்ற  தோட்டக்கலை பேராசிரியரால் 1980-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன் மகசூல் அதிகரிப்பு, விளைபொருள் தர மேம்பாடு, பூச்சி மற்றும் நோய்க்கட்டுப்பாடுச் செலவு குறைப்பு எனப் பல்வேறு பலன்களை அளிக்கிறது. இது ஓர் அடர்திரவம் ஆகும். இந்தியாவின் இயற்கைச் சுற்றுச்சூழ்நிலைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சுவாசித்தும் பலவகைப்பட்ட நுண்ணுயிரிகள் அடங்கியுள்ளன. ஒளிச்சேர்க்கை பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் இவற்றுள் முக்கிய நுண்ணுயிரிகள். இவை, மரபியல் மாற்றத்தினால் உருவாக்கப்படாதவை. மனிதக் குலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானவை. இந்த இ.எம் திரவத்துடன் ரசாயனம் சேராத ஒரு கிலோ வெல்லத்தை முழுமையாகக் கரைத்துக்கொள்ள வேண்டும். இதில், இ.எம் 1 லிட்டருக்கு, 20 லிட்டர் தண்ணீர் என்ற கணக்கில் சேர்க்க வேண்டும். இதனால், பயிரின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். மண் சார்ந்த கிருமிகளும் கட்டுப்படுத்தப்படும். 

இந்தத் திட்டம் பாண்டிச்சேரியில் பார்த்தபோதுதான், இதை நமது பள்ளியிலும் செயல்படுத்தலாமே எனத் தோன்றியது. இந்தத் திட்டம் பற்றி  எடுத்துரைத்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லார்ஸ் என்பவரைப் பள்ளிக்கு அழைத்துவந்து காண்பித்து செயலில் இறங்கினோம். இந்தத் திட்டம் செயல்பாட்டில் கொண்டு வந்து ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது'' என்கிறார் பாஸ்கரன். 

தண்ணீர் என்பது உலகளாவிய பிரச்னை. எனவே, எதிர்காலத் தலைமுறைக்கு நீரினை அளிக்க இதுபோன்ற மாற்றுத் திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.


டிரெண்டிங் @ விகடன்