வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (15/09/2018)

கடைசி தொடர்பு:14:30 (15/09/2018)

`இப்படிக் காலதாமதம் செய்யலாமா?!' - அபராதத்துக்கு ஆளான பி.எஸ்.என்.எல்.

நுகர்வோருக்கு தொலைபேசி இணைப்பு வழங்குவதில் காலதாமதம் செய்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 8000 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் நீதிமன்றம் - பி.எஸ்.என்.எல்

நெல்லை கே.டி.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர், வழக்கறிஞர் பிரம்மா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் தொலைபேசி இணைப்பு கோரியுள்ளார். அதற்கான சேவைக் கட்டணமாக ரூ.500 செலுத்தியுள்ளார். அவருக்கு 7 நாள்களுக்குள் தொலைபேசி இணைப்பு வழங்குவதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால், குறித்த காலத்துக்குள் அவருக்கு தொலைபேசி இணைப்பு வழங்கப்படவில்லை. அவர் இணைப்பு கோரி விண்ணப்பித்த 83 நாள்களுக்குப் பின்னர் 2016-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி இணைப்பு வழங்கப்பட்டது. அதனால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேவைக் குறைபாடு குறித்து அவர் புகார் செய்தார். காலதாமதம் காரணமாக தனக்கு பொருளாதார இழப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டதாக அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். 

பிரம்மாபி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சார்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நெல்லை நகரம் முழுவதும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் கேபிள் புதைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்ததால் கேபிள் பதிக்க இயலவில்லை. அதன் காரணமாகவே குறித்த காலத்துக்குள் மனுதாரருக்கு சேவை அளிக்க இயலவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.  

இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் நாராயணசாமி, உறுப்பினர் சிவமூர்த்தி ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர். அதில், ``பி.எஸ்.என்.எல் நிறுவனம் மனுதாரருக்கு குறித்த காலத்துக்குள் சேவையை அளிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. காலதாமதம் என்பது சேவை குறைபாடுதான். அதனால் மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.5000 வழங்க வேண்டும். அத்துடன் வழக்குச் செலவுக்கு ரூ.3000 வழங்க வேண்டும். ரூ.8000 ரூபாயை பி.எஸ்.என்.எல் பொது மேலாளர், சப்-டிவிஷனல் என்ஜினீயர் ஆகியோர் கூட்டாக அளிக்க வேண்டும். உரிய காலத்துக்குள் வழங்கத் தவறினால் 6 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.