`பயந்துபோய் பதவி கொடுத்துட்டாங்கப்பா!' - விஜயபாஸ்கர், அ.தி.மு.கவை கலாய்த்த துரைமுருகன்

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க-வில் பதவி கொடுக்கப்பட்டது குறித்து தி.மு.க பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

துரைமுருகன்

குட்கா ஊழல் தொடர்பாக  அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடுகளில் செப்டம்பர் 5-ம் தேதி சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். குட்கா அதிபர் மாதவராவ் டைரியில் உள்ள பெயர்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அமைச்சர் விஜய்பாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதில் அ.தி.மு.க அமைப்புச் செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டார். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை நேரில் சந்தித்து அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆசி பெற்றார்.

இந்த நிலையில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதே என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த துரைமுருகன், யாரைக் காட்டிக்கொடுப்பாரோ என்ற பயத்தில் அமைச்சருக்கு அ.தி.மு.கவில் பதவி வழங்கப்பட்டிருக்கலாம் என்றார். குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இதன் பேரிலே தமிழகத்தில் தொடர் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!