`நியாயத்தை நிலைநாட்ட தவறமாட்டார்'- உயிருக்குப்போராடும் ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி

 போலீஸ் அதிகாரி சாம்பிரியகுமார்

சென்னை போலீஸ் அதிகாரி சாம்பிரிய குமாரை காப்பாற்ற வேண்டும் என்று அவரின் சகோதரிகள் போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். 

`என்ன நேர்ந்தாலும், நியாயத்தை நிலை நாட்ட தவறக் கூடாது' என்று கோவையில் பெண் காவலருக்கு நிகழ்ந்த சம்பவத்தை தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் போலீஸ் ஏ.டி.எஸ்.பி சாம்பிரியகுமார். இவர், உயிருக்குப்போராடுவதாக நேற்று கமிஷனர் அலுவலகத்தில் சாம்பிரியகுமாரின் சகோதரிகள், சகோதரர் பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். புகாரின் பேரில் விசாரணை நடந்துவருகிறது. 

அவரின் சகோதரிகளிடமும் பேசினோம். அப்போது அவர்கள் கூறிய பதில், `சாம்பிரியகுமார் பேசினால் பல உண்மைகள் வெளியில்வரும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து சாம்பிரியகுமாருக்கு நடந்துவரும் கொடுமைகளை எங்களின் புகார் மனுவிலேயே விரிவாக குறிப்பிட்டுள்ளோம்' என்று தெரிவித்தனர். 

போலீஸ்

சாம்பிரியகுமாரின் சகோதரிகள் ஷீலா, மலர்கொடி, அமலா ஆகியோர் கொடுத்த புகார்மனுவில், ``கடந்த மார்ச் மாதம்தான் ஆவடி பட்டாலியனில் ஏ.டி.எஸ்.பியாக பணியாற்றிய சாம்பிரிய குமார் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற சில நாள்களிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டு அண்ணாநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்தபோது மூளையில் கேன்சர் கட்டி இருப்பது தெரியவந்தது. அமெரிக்காவில் உள்ள எங்கள் மூத்த சகோதரர் நெடுமாறன் ராஜ்குமார் மூலம் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தோம். ஆனால், முழுமையாக சிகிச்சை அளிப்பதற்குள், அவரை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர் அவரின் மனைவி, உறவினர்கள். சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சாம்பிரியகுமாருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க சாம்பிரியகுமாரின் மனைவி குடும்பத்தினர் விரும்பவில்லை. இதுகுறித்து கேட்டபோது என் கணவரை பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும். உங்களுக்கு இது தேவையில்லை என அவரின் மனைவி கூறுகிறார்.

சாம்பிரியகுமாருக்கு சிகிச்சை மறுக்கப்பட்ட நிலையில் அவர் உடல் நிலை மிகவும் மோசமாகி வாய் பேசமுடியாத நிலையிலும் கை கால்கள் செயலிழந்த நிலையிலும் படுத்த படுக்கையாக இருக்கிறார். நாங்கள் தினமும் அவரை வீட்டில் போய் பார்க்கும்போது மிரட்சியுடன் எங்கள் கையைப் பிடித்து சத்தம் போட்டு அழுது ஏதோ சொல்ல நினைக்கிறார். அவரின் மனைவியும் உறவினர்களும் அருகிலேயே உள்ளனர். மேலும் அவரை கருணைக் கொலை செய்து விடுவோம் எனவும் மனைவி குடும்பத்தினர் எங்களை மிரட்டுகின்றனர். 

எங்களது சகோதரர் பேசினால் பல உண்மைகள் வெளியே வரும் எனக் கருதுகிறோம். கடைசியாக சாம்பிரியகுமாருக்கு ஸ்கேன் செய்தபோது கேன்சர் கட்டி பெரிதாக வளர்ந்து ஆபத்தான கட்டத்துக்கு வந்துள்ளதாக என டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே, எங்கள் சகோதரரும், ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி-யுமான சாம்பிரியகுமாரை  மீட்டு அவரது உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து சாம்பிரியகுமாரின் சகோதரிகளிடம் செல்போனில் பேசியபோது, ``காவல்துறையில் அவர் எப்படியெல்லாம் பணியாற்றினார் என்பது  அவரைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும். அவருக்கா இந்த நிலைமை'' என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். எதற்காக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு ``சாம்பிரியகுமாரை காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம்'' என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!