பச்சையப்பன் கல்லூரியிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை... காஞ்சித் தலைவன் அண்ணாவின் டைம்லைன்! #VikatanInfographics | timeline of former Tn CM annadurai

வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (15/09/2018)

கடைசி தொடர்பு:15:12 (15/09/2018)

பச்சையப்பன் கல்லூரியிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை... காஞ்சித் தலைவன் அண்ணாவின் டைம்லைன்! #VikatanInfographics

திராவிடக் கருத்தியல் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பும், அவருக்கு இயல்பிலேயே இருந்த சாதுரியமும் பெரியாரிடம் கொண்டுபோய் நிறுத்தின. விரைவில் பெரியாரின் திராவிட படைத்தளபதி ஆனார் அண்ணா.

பச்சையப்பன் கல்லூரியிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை...  காஞ்சித் தலைவன் அண்ணாவின்  டைம்லைன்!  #VikatanInfographics

மிழகத் தேர்தல் வரலாற்றைத் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாவதற்கு முன், உருவான பின் என இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். அப்படிப்பட்ட அதிமுக்கியமான திருப்புமுனையாக இருந்தது தி.மு.க-வின் பிறப்பு. அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட தி.மு.க-வில் இருந்து, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு பிரிந்து, அண்ணாவின் பெயரில் இயங்கி வருகிறது அ.இ.அ.தி.மு.க. 

பெரியார் தோற்றுவித்த திராவிட இயக்கத்தின் மற்றொரு பரிணாமமாக, அண்ணா தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபட்டார். 1965,66-களில் ஏற்பட்டிருந்த கடும் பஞ்சம், கருணாநிதி-எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு மக்களிடையே ஏற்படுத்திய செல்வாக்கு, தேர்தல் கூட்டணியில் இருந்த கட்சிகளின் லாப-நஷ்ட கணக்குகள் ஆகியவை 1967 தேர்தலில் தி.மு.க ஆட்சியமைக்கக் காரணங்களாக இருந்தன எனக் கூறினாலும், அந்தக் காரணங்களை சாதகமாகப் பயன்படுத்தி, தி.மு.கவை வெற்றிப்பாதைக்குச் செலுத்திய லகான் அண்ணா கையில் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. 

அண்ணா பெரியார்

காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணாதுரை, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். திராவிடக் கருத்தியல் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பும், அவருக்கு இயல்பிலேயே இருந்த சாதுரியமும் பெரியாரிடம் கொண்டுபோய் நிறுத்தின. விரைவில் பெரியாரின் திராவிட படைத்தளபதி ஆனார் அண்ணா. `விடுதலை', `குடியரசு' ஆகிய நாளிதழ்களுக்குத் துணை ஆசிரியர் ஆனார். 1940 ம் ஆண்டு பம்பாய் நகரத்தில் பெரியார் அம்பேத்கரையும், ஜின்னாவையும் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் அண்ணா. அண்ணாவின் எழுத்துகளும் பேச்சுகளும் தமிழ் மக்களைப் பெருமளவில் ஈர்த்தன. இந்தி திணிப்புக்கு எதிராக அவர் எழுதிய எழுத்துகள் அன்றைய மாகாண காங்கிரஸ் அரசுக்கு மாபெரும் பிரச்னையாக, சிறையில் அடைக்கப்பட்டார் அண்ணா.

 

பெரியார் ஆசிரியராக இருந்த நாளிதழில், துணை ஆசிரியராக இருந்தவர் அண்ணா. பெரியார் தலைவராக இருந்த திராவிடர் கழகத்தில், பொதுச் செயலாளராக இருந்தவரும் அண்ணா. ``என் வாழ்க்கையில் நான் கண்டதும்,கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்" எனக் கூறிய அண்ணா, பெரியாருடன் முரண்பட்டு தனிக்கட்சி தொடங்கிய போதும்,  தலைவர் பதவியை பெரியாருக்காக ஒதுக்கி வைத்திருந்தார். 

தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி இரண்டையும் சந்தித்தவர் அண்ணா. சட்ட மன்ற உறுப்பினராகி, அடுத்த தேர்தலில் தோல்வியடைந்து, தன் தம்பிகளால் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1967 ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் மாபெரும் வெற்றி, இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அல்லாத முதல் ஆட்சியை நிறுவியது.

ஆணவப் படுகொலைகள் இன்றளவும் பெருகி வரும் இந்த நாட்டில், ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பே, `சுயமரியாதை திருமணங்களை' சட்டபூர்வமாக்கினார் அண்ணா. மற்ற மாநிலங்கள் மும்மொழிக் கொள்கைக்கு தம்மை மாற்றிக்கொண்டிருக்கையில், `இரண்டு மொழிக் கொள்கை'யை அமல்படுத்தியது அண்ணாவின் அரசு. நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு `தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டியது அண்ணாவின் தலைமையிலான தி.மு.க ஆட்சி.

புற்றுநோயின் தீவிர பாதிப்பில் இருந்த போதும், மருத்துவர்களின் ஆலோசனையை மீறி `தமிழ்நாடு' பெயர் மாற்ற விழாவில் கலந்து கொண்டார் அண்ணா. அந்த விழாவுக்குப் பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மீண்டும் வரவேயில்லை. 

தம்பிகளுக்கு இறுதியாக எழுதிய கடிதத்தில், ``எந்தப் பணி எனக்கு இனிப்பும், எழுச்சியும் தந்து வந்ததோ, எந்தப் பணியிலே நான் ஆண்டு பலவாக மிக்க மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வந்தேனா, எந்தப் பணி மூலம் என்னை உன் அண்ணனாக உள்ளன்புடன் ஏற்றுக்கொண்டு பெருமிதத்துடன் இந்த உலகத்துக்கு அறிவித்து வந்தேனோ, எந்தப் பணி வாயிலாக என் கருத்துகளை உனக்கு அளித்து, உன் ஒப்புதலைப் பெற்று அந்தக் கருத்துகளின் வெற்றிக்கான வழியினை காண முடிந்ததோ, எந்தப் பணி மூலம் தமிழகத்தை அறியவும், உலகத்தை உணரவும், தமிழ்ப் பண்பை நுகரவும் வழி கிடைத்து வந்ததோ, எந்தப் பணி மூலம் எப்போதும் உன் இதயத்தில் எனக்கு ஓர் இடம் கிடைத்து அது குறித்து நான் அளவற்ற அக மகிழ்ச்சி பெற முடிந்ததோ அந்தப் பணியினை முன்பு போலச் செய்ய முடியாதவனாக்கப்பட்டு, முடியவில்லையே என்று ஏக்கத்தால் துக்கப்பட்டுச் சூழ்நிலையின் கைதியாக்கப்பட்டு கிடக்கிறேன்" என்று தன் லட்சியத்துக்கு ஒத்துழைக்காத உடல்நிலையை எண்ணி வருந்தினார்.   

அண்ணா

அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட கூட்டம் பெரும் கடலைப் போல இருந்தது. அண்ணாவின் இறுதி ஊர்வலத்துக்குத் திரண்ட கூட்டம்  மாபெரும் சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டது.

அண்ணா பெரியாருக்காக விட்டு வைத்திருந்த `தி.மு.க தலைவர்' பதவி தற்போது கருணாநிதியின் மகன் ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தன் தலைவருக்காக அண்ணாவால் ஒதுக்கப்பட்ட பதவியின் முக்கியத்துவத்தை ஸ்டாலின் உணர்ந்து பணியாற்றுவது மட்டுமே அண்ணாவுக்கு அவர் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும்.      

அண்ணா


 
அண்ணா தனது இறுதி லட்சியமான `திராவிட நாடு' கோரிக்கையை மட்டுமே கைவிட்டார். அவரது பெயரில் இயங்கும் கட்சிகள் ஆட்சியில் அமர்ந்து அண்ணாவின் அடிப்படைக் கொள்கைகளான மாநில சுயாட்சி, சமூக நீதி முதலானவற்றையும் கைவிட்டு வருவது தற்போதைய காலத்தின் அவலம்.

எதையும் தாங்கும் அண்ணாவின் இதயம் இதைத் தாங்காது!   


டிரெண்டிங் @ விகடன்