வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (15/09/2018)

கடைசி தொடர்பு:16:30 (15/09/2018)

`குட்கா சோதனைக்கான முடிவு தெரியாமல் போய்விடக்கூடாது' - ஜி.கே.வாசன் ஆதங்கம்

``நீர் மேலாண்மையில் தமிழக அரசு முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. இனி வரும் காலங்களில் நீர் சேமிப்பில் ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்திட வேண்டும். ஆக்கபூர்வமான முறையில் தண்ணீரை சேமிக்கும் திட்டங்களை தீட்ட வேண்டும்” என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

ஜி கே வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி தெற்குமாவட்ட தலைவர் விஜயசீலனின் தந்தை தர்மராஜ் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை தூத்துக்குடி வந்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார், ``தமிழகத்தில் பல இடங்களில் அதிகமான மழை பெய்தும்கூட அணைகளிலும், நீர்நிலைகளிலும் நீர் இல்லாமல் வறட்சியாகவே காணப்படுகிறது. பல பகுதிகளில் தடுப்பணைகள் இல்லாததால்தான் நீர் கடலில் வீணாகக் கலக்கிறது. டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் கடைமடை வரை செல்லவில்லை என்ற காரணத்தினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலம் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது.

இதற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் சுணக்கமான செயல்பாடும், செயலற்ற தன்மையும்தான் காரணம். விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் குடிநீருக்கும் நீர்மேலாண்மை மிகவும் அவசியமானது. நீர் மேலாண்மையில் தமிழக அரசு முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. இனி வரும் காலங்களில் நீர் சேமிப்பில் ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்திட வேண்டும். ஆக்கபூர்வமான முறையில் தண்ணீரை சேமிக்கும் திட்டங்களை தீட்ட வேண்டும். ராமநாதபுரம் போன்ற வறட்சி பாதித்த பகுதிகளெல்லாம் வறட்சியில் இருந்து மீளக்கூடிய நிலையை எட்ட முடியும். குட்கா ஊழலைப் பொறுத்தவரையில் அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் சோதனைக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். வழக்கமான சோதனை, விசாரணைக்கு முடிவு தெரியாதது போல, இந்தச் சோதனைக்கும் முடிவு தெரியாமல் போய்விடக்கூடாது. அப்படிப் போனால், மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியுடன் விஜய்மல்லையா சந்தித்துப் பேசினார் என சுப்பிரமணியசாமி கருத்து சொல்லியுள்ளதால் சந்தேகம் வலுவடைந்துள்ளது. இதுகுறித்த உண்மைநிலையை மத்திய அரசு வெளிக் கொண்டுவர வேண்டும். த.மா.க., தனித்தன்மையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வரும் நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுத்து பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க