வெளியிடப்பட்ட நேரம்: 15:48 (15/09/2018)

கடைசி தொடர்பு:15:48 (15/09/2018)

`ப்ளஸ் ஒன் பொதுத் தேர்வுதான்; ஆனால் மதிப்பெண் கணக்கிடப்படாது' - செங்கோட்டையன் அறிவிப்பு

2019-ம் கல்வியாண்டு முதல் ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் செங்கோட்டையன்

ப்ளஸ் ஒன் பொதுத் தேர்வுக்கு 600 மதிப்பெண், ப்ளஸ் டூ பொதுத் தேர்வுக்கு 600 மதிப்பெண் என இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து 1,200 மதிப்பெண் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த முறையில் முக்கிய மாற்றங்களை தற்போது பள்ளிக் கல்வித்துறை கொண்டுவந்துள்ளது. 

இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், `வரும் 2019-ம் ஆண்டு முதல் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களின் 12-ம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ பொதுத் தேர்வு மதிப்பெண்ணுக்கு தலா 600 மதிப்பெண் வீதம் தனித்தனியே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு, ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்பு பொதுத் தேர்வுகள் கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. எனவே, ப்ளஸ் ஒன் தேர்வுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். ஆனால், தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது' எனத் தெரிவித்தார்.