வெளியிடப்பட்ட நேரம்: 15:53 (15/09/2018)

கடைசி தொடர்பு:16:39 (15/09/2018)

``ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு மதிப்பு இல்லை" - தினகரன் அணிக்குத் தாவிய முன்னாள் அமைச்சர்!

அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் டி.டி.வி.தினகரன் அணியில் இணைந்துள்ளார்.

தாமோதரன்

முன்னாள் அமைச்சர், மூன்று முறை தொடர்ந்து எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர் என்று ஆட்சியிலும் கட்சியிலும் பவர் ஃபுல்லாக வந்தவர் அ.தி.மு.க-வின் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாமோதரன். அமைச்சராக இருந்தபோதே இவரது பதவி, கடந்த 2014-ம் ஆண்டு பறிக்கப்பட்டது. அதன் பிறகு, கொங்கு மண்டலம் எஸ்.பி.வேலுமணியின் கன்ட்ரோலுக்கு வந்தது. இதனிடையே, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவில், ஓ.பி.எஸ் அணிக்குச் சென்றார் தாமோதரன்.

இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு தாமோதரனுக்கு மாநில விவசாய அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், திருச்சியில் டி.டி.வி.தினகரனைச் சந்தித்து, அ.ம.மு.க-வில் இணைந்துள்ளார் தாமோதரன்.

இதுகுறித்து தாமோதரன் கூறுகையில், “எங்களுக்கு, அணிகள் இணைந்ததில் உடன்பாடு இல்ல. எவ்வளவோ சொல்லியும், அதை ஓ.பி.எஸ் மதிக்கவில்லை. ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த பலருக்கும் டம்மி பதவிகள்தான் வழங்கப்பட்டுள்ளன. கட்சிக்குள் எங்களுக்கு வாய்ஸே இல்ல. இது சம்பந்தமாக ஓ.பி.எஸ்ஸிடம் சொல்லியும் அவர் காது கொடுத்து கேட்கவே இல்லை. நான் முன்னாள் அமைச்சர். 3 முறை எம்.எல்.ஏ-வா இருந்துள்ளேன்.

டி.டி.வி தினகரன் தாமோதரன்

எனக்கு டம்மியான ஒரு பதவிதான் கொடுத்து இருந்தார்கள். அம்மா ஒருமுறை, `எனக்குப் பிறகும் இந்த இயக்கம் இருக்கும்' என்று கூறியிருந்தார். அவர் கூறியதுபோல இருக்க வேண்டுமென்றால், அனைவரும் டி.டி.வி.தினகரன் தலைமையில் இணைய வேண்டும். பதவி இருப்பவர்கள் மட்டும்தான், தற்போதைய அ.தி.மு.க-வில் இருக்கின்றனர். அதனால்தான், அவர்கள் தினம் தினம் மதிப்பை இழந்து வருகிறார்கள். ஆனால், தொண்டர்கள் இருப்பதால், டி.டி.வி.தினகரனுக்கு செல்வாக்குக் கூடிக்கொண்டிருக்கிறது” என்றார்.