`பெரும்பாலும் பணிக்கு வருவதில்லை.. ஆனாலும் பிரசன்ட்தான்!’ - காரைக்குடி அரசு மருத்துவரின் மோசடி | Karaikudi Government Doctor's Attendance Fraud

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (15/09/2018)

கடைசி தொடர்பு:17:05 (15/09/2018)

`பெரும்பாலும் பணிக்கு வருவதில்லை.. ஆனாலும் பிரசன்ட்தான்!’ - காரைக்குடி அரசு மருத்துவரின் மோசடி

காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் அட்டென்டன்ஸ் மோசடி செய்த விவகாரம் சென்னை மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் வரைக்கும் சென்றிருப்பதால் சிவகங்கை மாவட்ட அரசு டாக்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மோசடி புகாரில் சிக்கிய மருத்துவர் இளங்கோ

இதுதொடர்பாக மருத்துவத்துறை இயக்குநருக்கு அனுப்பப்பட்டிருக்கும் புகாரில், ``சிவகங்கையில் அரசு மருத்துவக்கல்லூரி வந்தபிறகு மாவட்டத் தலைமை மருத்துவமனை காரைக்குடிக்கு மாற்றப்பட்டது. இந்த மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிபவர் இளங்கோ மகேஸ்வரன். இவர் காளையார்கோவிலில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தவர். தாலுகா மருத்துவமனையாக மாற்றியதும் காரைக்குடிக்கு மாறுதல் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். இவர் பெரும்பாலான நாள்களில் அரசு மருத்துவமனைக்கு வராமல் இருந்த நாள்களில் பணிக்கு வந்ததாக அட்டென்டன்சை ஒயிட்னர் வைத்து அழித்துவிட்டு, அதில் பணிக்கு வந்ததாகக் கையெழுத்துப் போட்டிருக்கிறார்.  

மெடிக்கல் ஜே.டி விஜயன்மதமடக்கி நேரில் வந்து ஆய்வு செய்தபோது கூட டாக்டர் இளங்கோ மகேஸ்வரன் ஆப்சென்ட். ஜே.டி ஆப்சென்ட் போட்ட இடத்தில், பணியில் இருந்ததாக மாற்றி அவர் கையெழுத்து போட்டிருக்கிறார். இதையெல்லாம் அங்குள்ள மருத்துவர்கள் யாரும் கேட்க முடியவில்லை. இளங்கோ மகேஸ்வரன் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதும் கிடையாது. ஆனால், ஆபரேசன் செய்பவர்களையும் செய்யவிடாமல் மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். இவையெல்லாம் சிவகங்கை மருத்துவத்துறை இணை இயக்குநருக்கு தெரிந்தும், அவர் இவருக்கு உடந்தையாக இருப்பதால் மற்ற டாக்டர்கள் நொந்து போயிருக்கிறார்கள்.

அவர் மீதும் சிவகங்கை மருத்துவத்துறை இணை இயக்குநர் விஜயன்மதமடக்கி மீதும் மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் இத்துறைச் செயலர் வரைக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளதால், தற்போது அட்டென்டன்சை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்’’ என்கிறது அந்தப் புகார் கடிதம். ஊழியர்களின் வருகைப் பதிவுக்காக பயோமேட்ரிக் சிஸ்டம் இருந்தும், இதுவரைக்கும் செயல்படவில்லை என்பதே இதுபோன்ற தவறுகளுக்குக் காரணம் என்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க