2+2-க்குப் பதில் 2+3 சீட்டர்... தனியார் பேருந்து நிறுவன அதிபருக்கு பிடிவாரன்ட்!

சேவை குறைபாடுடன் செயல்பட்ட வழக்கில் தனியார் பேருந்து நிறுவன அதிபருக்கு நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் கோர்ட் பிடிவாரண்ட்

நெல்லையைச் சேர்ந்தவர், ஜான்சன். வழக்கறிஞராக உள்ளார். தொழில் விஷயமாக சென்னைக்குச் சென்றிருந்த இவர், கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி நெல்லைக்குப் புறப்பட்டு வந்தார். அதற்காக சென்னையில் இருந்து பர்வீன் டிரான்ஸ்போர்ட் நிறுவன பேருந்தில் டிக்கெட் பதிவு செய்துள்ளார். 2+2 என்கிற வரிசைப்படி இருக்கை கொண்ட சொகுசுப் பேருந்துக்கான டிக்கெட் கட்டணமாக 900 ரூபாய் செலுத்தியுள்ளார். 

ஆனால், அவர் பேருந்தில் ஏறியபோது 2+3 என்கிற வரிசைப்படி உள்ள சீட் கொண்ட சாதாரணப் பேருந்தாக இருந்துள்ளது. தான் கட்டணம் செலுத்திய சொகுசுப் பேருந்து இதுவல்ல என ஜான்சன் தெரிவித்த போதிலும், பேருந்தில் இருந்த ஊழியர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. அத்துடன், கட்டணக் குறைப்பு செய்யவும் முன்வரவில்லை. அதனால் போதுமான வசதி இல்லாமலேயே சென்னையில் இருந்து பயணம் செய்து வந்துள்ளார்.

இது குறித்து பேருந்து நிர்வாகத்திடம் முறையிட்ட போதிலும், எந்தப் பதிலும் கிடைக்காததால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நெல்லை நுகர்வோர் நீதிமன்றத் தலைவரான நாராயணசாமி, உறுப்பினர் சிவமூர்த்தி ஆகியோர் பேருந்து நிறுவனத்தினர், மனுதாரர் ஜான்சனுக்கு 7,000 ரூபாய் அபராதம் வழங்க உத்தரவிட்டிருந்தார். ஆனால், பேருந்து நிர்வாகத்தினர் அந்தப் பணத்தை வழங்கவில்லை.

அதனால் ஜான்சன் மீண்டும் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதில், நீதிமன்ற உத்தரவுப்படி பேருந்து நிர்வாகம் பணம் வழங்கவில்லை. அதனால் அந்த நிறுவன அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பேருந்து அதிபருக்கு நுகர்வோர் நீதிமன்றம் 3 முறை உத்தரவிட்டது. ஆனால், தனியார் பேருந்து நிறுவனம் சார்பாக யாருமே ஆஜராகவில்லை. அதனால் பேருந்து நிறுவன அதிபரான சென்னையைச் சேர்ந்த அப்துல் என்பவருக்கு நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!