வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (15/09/2018)

கடைசி தொடர்பு:16:53 (15/09/2018)

கைதிகளின் சொகுசு வாழ்க்கை..! - புழல் சிறை, ரிசார்ட்டாக மாறியது எப்படி?

சென்னை புழலில் உள்ள மத்திய சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததற்கு ஆதாரமாக புகைப்படங்கள் வெளியாகின.  ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட இட்லி, வடை, பொங்கல் போன்ற உணவு பதார்த்தங்களுடன் புகைப்படத்தில் கைதி ஒருவர் அமர்ந்திருக்கிறார். மற்றொரு கைதி ஸ்போர்ட்ஸ் ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு படுக்கையில் அமர்ந்து  உற்சாகமாக போஸ் கொடுக்கிறார். இன்னொருவர் பைஜாமா அணிந்து  செல்ஃபி எடுப்பதில் பிசியாக உள்ளார். பலத்த பாதுகாப்பையும் மீறி கைதிகளுக்கு செல்போன்கள் கூட  சிறைக்குள் கிடைப்பது எப்படி? 

சென்னை சிறை

இந்த செப்டம்பர் 2-ம் தேதி புழல் சிறைக்குள் கஞ்சா கடத்த முயன்ற சிறைக் காவலர் ஒருவர் பிடிபட்டார். தொடர்ந்து  கைதிகளுக்குப் போதைப் பொருள்கள்  உள்ளிட்டவற்றை சிறைக் காவலர்களே சப்ளை செய்வதாக புகார் எழுந்தது. செப்டம்பர் 7-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் போதை மருந்து கடத்தி பிடிபட்ட கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிக்கப்பட்டன. சிறைக்குள் இருந்த 18 டி.வி-க்கள் கைப்பற்றப்பட்டன. வெளிநாட்டைச் சேர்ந்த போதை மருந்து கடத்தி பிடிபட்ட கைதிகள்தான் பெரும்பாலும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். சிறைக் காவலர்களுக்கு தாராளமாக பணத்தை வாரி இழைத்துள்ளனர். 

கைப்பற்றப்பட்ட ஒரு செல்போனின் பதிவுகளை ஆராய்ந்தபோது தென்ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா , இலங்கை போன்ற நாடுகளுக்கு போன் பேசியதும் 40 முறை வாட்ஸ்அப் பயன்படுத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறைக்குள் இருந்துகொண்டே வெளிநாடுகளில் உள்ள போதை மருந்து கும்பல்கள் இவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனார். சிறைக் காவலர்களே அவர்களுக்கு செல்போன் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

சென்னை சிறை

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா மறுத்துள்ளார். ``1983- ம் ஆண்டு தமிழ்நாடு சிறைத்துறை சட்டப்படி சிறையில் 'ஏ' வகுப்பு கைதிகளுக்கு தனியான போர்வை, கட்டில், மேஜை, சேர், மின்விசிறி வழங்கப்படுவது உண்டு. பண்டிகை நாள்களில் அவர்களுக்கு தனியாக சமைத்துக்கொள்ளவும் அனுமதி உள்ளது.  ஷார்ட்ஸ், ஷூக்கள் அணியவும் அனுமதி உண்டு'' என்றார். 

சிறைத்துறை டி.ஐ.ஜி சொல்வதுபோல இதுவெல்லாம் அனுமதிக்கப்பட்டவை என்றாலும் கைதிகளுக்கு செல்போன் கிடைத்தது எப்படி என்கிற கேள்வி எழாமல் இல்லை. அசுதோஷ் சுக்லாவும் இதை ஒப்புக்கொள்கிறார். ``சிறைக்குள் செல்போன் கிடைத்தது மட்டும்தான் சட்டத்துக்கு புறம்பானது'' என்று அவரே ஒப்புக்கொள்கிறார். `கைதிகளுக்கு செல்போன் கொண்டு போகும் சிறை ஊழியர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்' என்றும் அசுதோஷ் சுக்லா எச்சரித்துள்ளார். 

புழல்சிறை 200 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்தது. இந்தியாவில் உள்ள நவீனப்படுத்தப்பட்ட சிறைச்சாலைகளில் இதுவும் ஒன்று. இங்கே 3 ஆயிரம் கைதிகளை பராமரிக்க முடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க