வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (15/09/2018)

கடைசி தொடர்பு:16:57 (15/09/2018)

`ரஜினியைக் காட்டி மிரட்டுகிறார்கள்!' - காங்கிரஸை, தி.மு.க ஓரம்கட்டும் பின்னணி #VikatanExclusive

இவர்களுக்கு ஒதுக்கும் இடங்களை ஜி.கே.வாசனுக்கும் வைகோவுக்கும் கொடுத்தால்கூட, காங்கிரஸ் கட்சிக்கு வரக்கூடிய ஓட்டுகள் நமக்கு வந்து சேரும்.

`ரஜினியைக் காட்டி மிரட்டுகிறார்கள்!' - காங்கிரஸை, தி.மு.க ஓரம்கட்டும் பின்னணி #VikatanExclusive

காங்கிரஸ் கட்சியை ஓரம்கட்டும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறது தி.மு.க. 'காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர், ரஜினி பெயரையும் எடப்பாடி பழனிசாமி பெயரையும் சொல்லி நம்மை மிரட்டுகின்றனர். மாநிலம் முழுவதும் செல்வாக்கு இல்லாத கட்சியை, நாம் ஏன் தோளில் சுமக்க வேண்டும்?' எனக் கொந்தளித்திருக்கிறார் தி.மு.க-வின் முக்கியத் தலைவர் ஒருவர். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்தியா முழுவதும் முழு கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியது காங்கிரஸ் கட்சி. தமிழ்நாட்டில் நடந்த இந்தப் போராட்டத்தில், `தி.மு.க பங்கேற்கும்' என அறிவித்ததோடு ஒதுங்கிக் கொண்டார் மு.க.ஸ்டாலின். சேப்பாக்கத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில், தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. தி.மு.க சட்டத்துறையில் அங்கம் வகிக்கும் வழக்கறிஞர் கிரிராஜன் மட்டும் கலந்துகொண்டார். இந்தக் கோபத்தை மேடையிலேயே வெளிப்படுத்தினார் தென்சென்னை மாவட்டக் காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன். அவர் பேசும்போது, 'அறிவாலயத்தில் கூட்டம் நடந்தால், எங்கள் கட்சியின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். ஆனால், நாங்கள் நடத்தும் போராட்டத்தில் தி.மு.க-வின் முக்கியத் தலைவர்கள் யாரும் கலந்துகொள்வதில்லை. நாங்கள் ஓர் அகில இந்திய கட்சி. எங்களுக்கு உரிய கௌரவம் அளிக்கப்பட வேண்டும்' எனப் பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு, அங்குள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்புக் குரலுக்கு தி.மு.க நிர்வாகிகள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

காங்கிரஸ் போராட்டம்

'பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசும்போது, `இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்' என்றார். இப்போது, காங்கிரஸ் கட்சியை ஓரம்கட்டுவதன் பின்னணி என்ன?' எனத் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். "நாடாளுமன்றத் தேர்தலை, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து எதிர்கொள்வோம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரம், தங்கள் தரப்பின் வலிமை என்ன என்பதையும் அந்தக் கட்சியின் தலைவர்கள் உணர்ந்ததுபோலத் தெரியவில்லை. இதைப் பற்றி பலமுறை ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார் ஸ்டாலின். 

இதுதொடர்பாக அறிவாலயத்தில் நடந்த விவாதத்தில் பேசிய சீனியர் ஒருவர், '2016 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சிதான் பிரதான காரணம். அந்தத் தேர்தலின்போது, 'த.மா.கா-வைச் சேர்க்கக் கூடாது' எனக் காங்கிரஸ் தரப்பில் கண்டிஷன் போட்டனர். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 41 சீட்டுகளைக் கொடுத்ததற்குப் பதிலாக 30 சீட்டுகளை ஒதுக்கியிருக்கலாம். மீதமுள்ள 11 இடங்களை த.மா.கா-வுக்குக் கொடுத்திருந்தால், நமக்கு ஒரு சதவிகித வாக்குகளாவது கூடுதலாகக் கிடைத்திருக்கும். எளிதாகத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம். அதிலும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 13 பேர் வாசன் பக்கம் உள்ளனர். மூன்றில் ஒரு பங்கு காங்கிரஸ் தொண்டர்கள் அவர் பக்கம்தான் உள்ளனர். 41 சீட்டுகளைக் கொடுத்து நாம் ஏமாந்துவிட்டோம். அதனால்தான் நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை. 2009-ல் காங்கிரஸ் கட்சிக்கு 16 சீட்டுகளை ஒதுக்கினோம். அதில் 8 இடங்களில் அவர்கள் தோற்றுவிட்டார்கள். இந்தத் தேர்தலில் கராத்தே தியாகராஜன்5 எம்.பி சீட்டுகளை அவர்களுக்கு ஒதுக்குவோம். இதற்கு ஒப்புக்கொண்டால், கூட்டணிக்குள் அவர்களை வைத்திருப்போம். இவர்களுக்கு ஒதுக்கும் இடங்களை ஜி.கே.வாசனுக்கும் வைகோவுக்கும் கொடுத்தால்கூட, காங்கிரஸ் கட்சிக்கு வரக்கூடிய ஓட்டுக்கள் நமக்கு வந்து சேரும்' என்றவர், 

"உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு பற்றிய பேச்சு நடந்தபோது, '2 சதவிகித இடங்களைத்தான் கொடுப்போம்' எனக் கூறினோம். இதற்கே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் ஜி.கே.வாசனுக்கு உள்ள செல்வாக்கு இங்குள்ள வேறெந்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் கிடையாது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக நம்மிடம் வந்தார்கள். அன்று இருந்த சூழலில் 10 இடங்களை ஒதுக்கினார் கருணாநிதி. இன்று அவர்கள் மிகவும் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டார்கள். அவர்களை எப்படித் தலையில் தூக்கி வைத்துக்கொண்டிருக்க முடியும். மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதாகச் சொல்பவர்கள், இங்கும் ஜி.கே.வாசனிடம் பேசி கட்சியைப் பலப்படுத்த வேண்டியதுதானே... எத்தனை சீட்டுக்கு நாம் தகுதியாக இருக்கிறோம் என்பதை காங்கிரஸ் நிர்வாகிகள் உணர்ந்து பார்க்க வேண்டும். கடைசியாக அவர்கள் தனித்து நிற்கும்போது, 4 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றனர்' என ஆதங்கத்தோடு விவரித்தார். 

இதைக் கவனித்த இன்னொரு முக்கிய நிர்வாகி ஒருவர், 'அந்தக் கட்சிக்குள் இருக்கும் ஒரு சிலர் ரஜினியைக் காட்டி நம்மை மிரட்டுகின்றனர். வேறு சிலர், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எடப்பாடி பழனிசாமியோடு போகப் போவதாகக் கூறி மிரட்டுகின்றனர். ஒரு சிலர் தமிழ்நாடு முழுக்க அமைப்பே இல்லாத தினகரனோடு போவதாக மிரட்டுகிறார்கள். அந்த டி.வி கம்பெனிக்காரர்தான் (வசந்தகுமார்) சரியாகப் பேசுகிறார். செல்வாக்கே இல்லையென்றாலும், அவர்களின் நடவடிக்கைகள் வேறு மாதிரியாக இருக்கின்றன' எனக் கூறி தனது ட்ரேட் மார்க் சிரிப்போடு நக்கலடித்தார். அவரது கருத்தைக் கட்சியின் சீனியர்களும் ஆமோதித்தனர்" என்றார் விரிவாக.