ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு வருவதில் தாமதம் - தூத்துக்குடி ஆட்சியர் தகவல்!

பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்த ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக்குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலின் உடல்நலக் குறைவு காரணமாக, அக்குழு தூத்துக்குடிக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துாரி தெரிவித்துள்ளார்.

துாத்துக்குடியில் உள்ள  வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28-ம் தேதி, நிரந்தரமாக மூடப்படுகிறது எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டதுடன் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. இதை எதிர்த்தும் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம், டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கை விசாரித்த பசுமைத் தீர்பாயம், ஸ்டெர்லைட் ஆலை இயங்க வேண்டுமா வேண்டாமா என ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஒருவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

அத்துடன், இந்தக் குழு, 6 வார காலத்துக்குள் தங்களின் ஆய்வை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்தக்  குழுவின் தலைவராக முதலில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஷிவாக்ஸ் ஜல் வசீப்தரை தலைவராக நியமித்தது. இவருடன், மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறையை சேர்ந்த ஒருவரும், மத்திய  மாசு கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த  ஒருவரும்  உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், “இந்தக் குழுவில் பணியாற்ற தனக்கு விருப்பம் இல்லை” என, தெரிவித்து வசீப்தர்  தலைமை பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.

பின்னர், அவருக்குப் பதிலாக,  குழுவின் புதிய தலைவர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.பி.சிவசுப்பிரமணியம், ஆர்.ரவீந்திரன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். ``இக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளை நியமிக்கக் கூடாது” என, ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் பசுமைத் தீர்பாயத்தில் ஏற்கெனவே கோரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால், ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் தலைவராக மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வாலை கடந்த சில நாள்களுக்கு முன்பு நியமித்து பசுமை தீர்பாயம் உத்தரவிட்டது.

இந்தக் குழுவினர் இந்த வாரத்தில், தங்களின் ஆய்வுப் பணியை மேற்கொள்வார்கள் என, துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துாரி  கடந்த (10.09.2018) திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். இது குறித்து இன்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ``ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலின் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன்  காரணமாக, ஆய்வுக்குழு தூத்துக்குடிக்கு வருவதில் காலதாமதமாம் ஆகிறது.” எனத் தெரிவித்தார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!