வெளியிடப்பட்ட நேரம்: 16:48 (15/09/2018)

கடைசி தொடர்பு:16:48 (15/09/2018)

`கோயில்களில் ஆன்லைன் புக்கிங்' - அறநிலையத்துறையோடு கைகோக்கும் 'தேசிய தகவல் மையம்’! #VikatanBreaks

தமிழகக் கோயில்களின் இணையதளங்கள் மற்றும் இ-சேவை உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் சேவைகளையும் ' தேசிய தகவல் மையத்தோடு' இணைந்து அறநிலையத்துறை வழங்க இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36,000க்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இதில் மிக முக்கியமான கோயில்களில் தரிசனம், இ-உண்டியல், பிரசாதம், பூஜை, தங்கும் இடம் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலமாக புக் செய்யும் வசதி தற்போது இருக்கிறது. இதை சில தனியார் நிறுவனங்கள் டெண்டர் எடுத்து நடத்தி வருகின்றன. கோயில்களுக்கு வரும் பணம், முறையாக வரவில்லை என்றும் சுமார் ரூ.350 கோடிக்கும் மேல் இதில் இழப்பு நடந்திருப்பதாகவும் தணிக்கையின்போது தெரியவந்தது. இதையடுத்து, கோயில்களுக்கு இ-சேவை வழங்கி வரும் தனியார் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டது அறநிலையத்துறை. சர்வர் கோளாறு காரணமாகப் பண பரிவர்த்தனையில் காலதாமதம் ஆனதாகத் தெரிவித்தன அந்த நிறுவனங்கள். 

அறநிலையத்துறை கோயில்

இதையடுத்து, கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடக்கும் கோயில்களில், தனியார் நிறுவனங்களை இனியும் நம்பாமல், 'தேசிய தகவல் மையத்தோடு' கைகோக்க இருக்கிறது அறநிலையத்துறை. தற்போது அறநிலையத்துறையின் புதிய ஆணையராகப் பொறுப்பேற்றிருக்கும் ராமச்சந்திரனும் இ-சேவைகளுக்கு முக்கியத்துவம் தருகிறார். இனி கோயில்களின் ஆன்லைன் புக்கிங்கில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.