`நிம்மதியாக வாழ இயற்கையைப் பாதுகாக்கணும்' - மாணவர்களுடன் தூய்மைப் பணியில் ஈடுபட்ட கமாண்டர்

தேசிய தூய்மை இயக்கம் தொடங்கப்பட்ட தினத்தை முன்னிட்டு மாணவ - மாணவிகளுடன் இணைந்து  மண்டபம் கடலோரக் காவல்படை வீரர்கள் கடலோரப் பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். 

கடற்கரை பகுதிகளில் தூய்மை பணி மேற்கொண்ட கடலோரக் காவல்படையினர்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளில் நாடு முழுவதும் தூய்மை இயக்கமான 'ஸ்வச்ச பாரத்' இயக்கம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. வரும் அக்டோபர் 2-ல் இந்த இயக்கத்தின் 4-ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் இரு வாரங்களுக்கு தேசிய தூய்மை இயக்கத்தை கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் தூய்மை இயக்கம் தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன. பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் சேலத்தில் உள்ள மகளிருடன் தூய்மை இயக்கம் தொடர்பாகக் கலந்துரையாடினார்.

இந்தநிலையில் மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். மண்டபத்தை அடுத்துள்ள சுற்றுலா கடற்கரை தலமான அரியமான் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தூய்மை பணியை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி காமினி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கடற்கரை ஓரம் குவிந்து கிடந்த கழிவுப் பொருள்களை பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுடன் இணைந்து கடலோரக் காவல்படை வீரர்கள், தமிழக கடலோரக் பாதுகாப்புக் குழும காவலர்கள், சுங்க இலாகாவினர், மீன் துறையினர் மற்றும் பசுமை ராமேஸ்வரம் அமைப்பின் நிர்வாகிகள் வாசுதேவன், சரஸ்வதி உள்ளிட்டோர் சேகரித்து கடற்கரை பகுதியைத் தூய்மைபடுத்தினர்.

முன்னதாக, தூய்மை பணி தொடக்க விழாவில் பேசிய கமாண்டர் வெங்கடேசன், ''இயற்கையின் கொடையான கடல் பகுதியானது முதலீடு ஏதும் இல்லாமலேயே என்னற்ற பொருளாதார வளங்களை நமக்கும் நாட்டுக்கும் வழங்கி வருகிறது. அத்தகைய கடலை பிளாஸ்டிக், கழிவு எண்ணெய், தேவையற்ற பொருள்களால் மாசுபடுத்தும் சூழல் உள்ளது. இதைத் தடுக்காவிட்டால் நமக்கு சுகாதாரமான வாழ்வு கிடைக்காமல் போய்விடும். ஓடி ஓடி எவ்வளவு பணம் சேர்த்தாலும் சுத்தமான நிம்மதியான வாழ்க்கை கிடைக்காது. அத்தகைய வாழ்க்கை நமக்கு கிடைக்க நாம் ஒவ்வொருவரும் இயற்கையை பாதுகாக்க முன் வர வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!