பெங்களூரு போதை ஊசி; போலி ஜாமீன்! - குண்டர் சட்டத்தில் கைதான 4 பேர் | 4 persons arrested goondas act in kovai

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (15/09/2018)

கடைசி தொடர்பு:17:25 (15/09/2018)

பெங்களூரு போதை ஊசி; போலி ஜாமீன்! - குண்டர் சட்டத்தில் கைதான 4 பேர்

கோவையில் போதை ஊசி மருந்துகளை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்தவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குண்டர்

கோவையில் கடந்த சில மாதங்களாகப் போதை ஊசி மருந்து பழக்கம், மாணவர்கள் மத்தியில் அதிகரித்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து போதை ஊசி மருந்துகளை வாங்கி வந்து, மாணவர்களிடம் அதிக விலைக்கு சில கும்பல்கள் விற்றுவருவதாகவும் புகார் வந்த வண்ணம் இருந்தன. புகாரை அடுத்து காட்டூர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களின் தேடுதலில் கடந்த ஜூலை மாதம் காந்திபுரம் அருகே போதை மருந்துகளை விற்பனை செய்துவந்த ஜாய் இமானுவேல், முகமது சிஹாப், ஜூல்பி அலி, முகமது அனாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போதை மருந்துகளும் காலி சிரஞ்சுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மருத்துவத்துறையில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் போதை மருந்துகளை பெங்களூருவிலிருந்து வாங்கி வந்து கோவை சுற்றுவட்டார இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும், மாணவர்களைப் போதை மருந்துகளுக்கு அடிமையாக்கியதும் தெரியவந்தது. பின்னர், இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே சிறையில் இருக்கும்போதே, இந்த நால்வரில் ஒருவரான முகமது சிஹாப் போலி மருத்துவ சான்றிதழ் கொடுத்து ஜாமீன் பெற முயலும்போது சிக்கிக்கொண்டார். இது சர்ச்சையாக மாறியது. இந்நிலையில், இந்த நால்வரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கக் கோவை மாநகர காவல் ஆய்வாளர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று அவர்கள் சிறையிலேயே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க