வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (15/09/2018)

கடைசி தொடர்பு:18:40 (15/09/2018)

சிக்கல் பிரசவத்திலிருந்து மீண்ட மாற்றுத் திறனாளி! - பசுமை வீடு உதவியோடு தங்கச் சங்கிலி அளித்த கலெக்டர்

அக்னொட்ரோபில்சியா (Achondroplasia) நோயால் பாதித்து எலும்பு வளர்ச்சி குறைந்து குள்ளமாக உள்ள மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து இரு உயிர்களையும் காப்பாற்றி சாதனை படைத்துள்ளார்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், குப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (31). இவரின் மனைவி உமாமகேஸ்வரி (29). இருவரும் மாற்றுத்திறனாளிகள். உமா மகேஸ்வரி 110 சென்டி மீட்டர் உயரமுள்ளவர். இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில்,  நிறைமாத கர்ப்பிணியான உமா மகேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, கடும் மூச்சுத்திணறலுடன் ஆகஸ்ட் 20-ம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இதுபோன்ற உயரம் குறைவான பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பது மிகவும் சிக்கலானது என்பதாலும், தாய் அல்லது சேய் என 2 உயிர்களில் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நிலையில், என்ன செய்வது என்று புரியாத நிலையில், மகப்பேறு பிரிவு துறைத் தலைவர் டாக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான மருத்துவர் குழுவினர் தீவிர முயற்சி எடுத்து, பல்வேறு இன்னல்களைச் சமாளித்து செப்டம்பர் 4-ம் தேதி உமாமகேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதன்மூலம் மூலம் 2.3 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்தது. தாய், சேய் என 2 உயிர்களையும் காப்பாற்றி சாதனைப் படைத்துள்ளது அந்த மருத்துவர் குழு. இந்த நிலையில் மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து டாக்டர் ராஜேஸ்வரியிடம் பேசினோம், ``அந்தப் பெண்ணை அனுமதிக்கும்போது அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தது. அவர் குள்ளமாக இருப்பதால் வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு மூச்சு விடுவது மிகவும் கஸ்டம். அதனால் அவருக்கு வெண்டிலெட்டர் சுவாசம் கொடுத்தோம். மேலும் அவரது உடலில் ரத்தம் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் பிரசவம் பார்த்தால் ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக இருந்தது. அதனால், பிரசவ தேதியை முடிவு செய்தோம். அதன் பின் பிரசவ நாள் வரைக்கும் அவருக்கு முழு உடல் பரிசோதனையைத் தினமும் செய்துவந்தோம். பிரசவ வலியைத் தாங்கக் கூடிய அளவுக்கும் மூச்சை ஃபிரியாக விடும் அளவுக்கும் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்தோம். வயிற்றுக்குள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதையும் தினமும் பரிசோதனை செய்துவந்தோம். தொடந்து 14 நாள்கள் அவரை எங்கள் மருத்துவக்குழுவின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தோம். 

குழந்தையைப் பெற்றெடுக்கும் அளவுக்கு அவர் உடல் தேறிய பின்பு எங்கள் மருத்துவக் குழுவிடம் ஆலோசனை செய்து அறுவை சிகைச்சைக்குத் தயாராக சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாகப் போராடி குழந்தையை சிசேரியன் மூலம் எடுத்தோம். இப்போது, தாயும் மகனும் நலமாக உள்ளனர். இதுபோன்று குள்ளமாக இருப்பவர்களுக்குப் பிரசவம் பார்த்து இரண்டு பேரையும் காப்பாற்றி இருப்பது இதுவே முதல் முறை. இதுபோன்ற ஒரு அனுபவத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. இதற்கு முதலாவதாகக் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் கடவுள் இருக்கிறார் எல்லாம் அவர் செயல்" என்றார்.

மருத்துவர்களுக்குப் பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் கே.கந்தசாமி, கேக் வெட்டிக் கொண்டாடி அந்தக் குழந்தைக்குப் பெயர் வைத்து அவருடைய சம்பள பணத்தில் 1 சவரன் தங்கச் சங்கிலியை அந்தக் குழந்தைக்கு அணிவித்தார். அதோடு மாற்றுத்திறனாளியான தம்பதிகள் மிகவும் வறுமையில் சொந்த வீடு இல்லாமல் இருப்பது தெரிந்து அவர்களுக்கு அங்கேயே பசுமை வீடு கட்டுவதற்கான ஆனையை வழங்கினார். இதைத் தெரிந்துகொண்டு பல அமைப்புகள் அந்தத் தம்பதிக்கு வாழ்த்துகளையும் உதவிகளையும் செய்து வருகிறன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க