`காங்கிரஸின் உண்மை முகத்தை ராஜபக்‌ஷேவின் கருத்து காட்டிவிட்டது!’ - இல.கணேசன்

``ராஜபக்‌ஷே சில ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழிப்பதற்கான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அன்று மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தது எனக் கூறியிருக்கிறார். இதைவிடக் காங்கிரஸின் உண்மை முகத்தை எப்படி விவரிக்க முடியும்?” எனப் பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இல கணேசன்

தூத்துக்குடியில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற இலவச கண் மற்றும் பொது மருத்துவமுகாமை தொடங்கி வைத்த இல.கணேசன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் ஒரு குறிப்பு தந்துள்ளது. அதன்படி அரசும் ஆளுநரிடம் இதுகுறித்த அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டது. ஆளுநர் என்பவர் மாநில அரசின் அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்டு நடப்பவராகவும், மத்திய அரசின் பிரதியாகவும் செயல்படுகிறார். அதன் அடிப்படையிலும் விடுதலை செய்வதில் சட்டச்சிக்கல்கள் உள்ளதா? என்பது குறித்து மத்தியரசிடம் ஆலோசனையைக் கேட்டிருக்கலாம். ஆலோசனைக்குப் பிறகு, தன் முடிவை ஆளுநர் அறிவிப்பார். அரசியல் காரணத்துக்காகப் பலரும் இதுகுறித்து விமர்சனம் செய்கிறார்கள்.

ரபேல் போர் விமானம் வாங்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மத்தியரசு மீது திரும்பத் திரும்ப புகார் கூறி வருகிறார். `நம் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் 36 புதிய ரபேல் விமானம் வாங்கப்பட்டுள்ளது. இவ்விமானங்கள் இந்தியாவிலேயே தயார் செய்ய வேண்டும் என்றாலும்கூட, விமானக் கட்டுமானம் செய்யும் வசதிகள் இங்கு இல்லை என்பதும், அந்த வசதியை ஏற்படுத்துவதற்குக் காலதாமதம் ஆகும் என்பதாலும், அதைவிட விலை அதிகமாகும் என்பதாலும்தான் அந்நிய நாட்டில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் கூடுதலாக சில பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால்தான் விமானத்தின் கொள்முதல் விலையும் உயர்ந்துள்ளது.

இதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வெளிப்படையாகச் சொல்லக் கூடாது என்பதால்தான் சொல்லப்படவில்லை. தேசத்தின் மீது அக்கறை இல்லாமல் பாதுகாப்பு அம்சத்தை வெளிப்படையாகச் சொல்லி, பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கேள்வி எழுப்புகிறார் ராகுல். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எவ்வளவு விலை நிர்ணயம் செய்யப்பட்டதோ, அதைவிட 9 சதவிகிதம் குறைவாகவும், அவர்களது ஆட்சிக் காலத்தைவிட கூடுதலான பாதுகாப்பு அம்சத்துடன் விமானம் வாங்கப்பட்டுள்ளது’ எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெளிவாகத் தெரிவித்துவிட்டார்.  

ஒருபுறம் 36 விமானம் வாங்கியது தவறு. இதில் முறைகேடு நடந்துள்ளது எனக் கேட்கும் காங்கிரஸாரே, ஏன் 126 விமானங்கள் வாங்கப்படவில்லை எனவும் கேள்வி கேட்கிறார்கள். பொருத்தமற்ற பேச்சு, பொருத்தமற்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். தினம் ஓர் ஊழல் குற்றச்சாட்டுடன் நடந்த காங்கிரஸ் ஆட்சியைவிட, கடந்த 4 ஆண்டுகளில் சிறப்பாகவே மோடி ஆட்சி செய்து வருகிறார் என்பதை ராகுல்காந்தியும் திருநாவுக்கரசரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியா வந்துள்ள ராஜபக்‌ஷே சில ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், “விடுதலைப் புலிகளின் இயக்கத்தை ஒழிப்பதற்கான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அன்று மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தது” எனப் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இதைவிடக் காங்கிரஸின் உண்மை முகத்தை எப்படி விவரிக்க முடியும்?” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!