வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (15/09/2018)

கடைசி தொடர்பு:19:20 (15/09/2018)

`தி.மு.க தலைமையில் அணிசேர்ந்து பா.ஜ.க, அ.தி.மு.க-வைத் தோற்கடிப்போம்!’ - ம.தி.மு.க மாநாட்டில் தீர்மானம்

ம.தி.மு.க மாநாடு

பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா, ம.தி.மு.க-வின் வெள்ளி விழா மற்றும் வைகோவின் பொதுவாழ்வு பொன்விழா ஆகிய மூன்றும் சேர்த்து முப்பெரும் விழாவாக ஈரோட்டில் இன்று ம.தி.மு.க சார்பில் கொண்டாடப்பட்டது.

ஈரோடு - பெருந்துறை சாலையில் மூலக்கரை என்னுமிடத்தில் ம.தி.மு.க மாநாடு நடைபெறுகிறது. 25 ஏக்கரில் மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு கருணாநிதி நகர் என்று பெயர் சூட்டியிருந்தனர். காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கிய மாநாட்டில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பேசினர். பேச்சுக்கு இடையே ம.தி.மு.க முப்பெரும் விழா மாநில மாநாட்டின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ம.தி.மு.க மாநாடு

அந்தவகையில் முதல் தீர்மானமே, 'மக்கள் ஆட்சித் தத்துவத்தைக் கேள்விக்கு உள்ளாக்கி வருகின்ற மத்திய பா.ஜ.க அரசு மற்றும் அதன் கைப்பாவையாக இயங்கி வருகின்ற அ.தி.மு.க அரசு இரண்டையும் வீழ்த்துவதற்கு தி.மு.க தலைமையில், தோழமைக் கட்சிகளுடன் அணி சேர்த்து, ம.தி.மு.க தனது கடமைகளை மேற்கொள்ளும்' என அதிரடி தீர்மானம் இயற்றி பிரகடனம் செய்தனர். மேலும், 'காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பா.ஜ.க அரசு கைவிட வேண்டும், தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு நினைத்தால் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்' எனப் பா.ஜ.க-வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீர்மானத்தை இயற்றினர்.

மேலும், 'தமிழ் ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், காவிரி பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  சேலம் - சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும், மத்திய அரசின் முகவர் போன்று மாநில ஆளுநர் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்'.

ம.தி.மு.க மாநாடு

 'காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது மற்றும் ராசிமணலிலும் தடுப்பணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது, அணைப் பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற வேண்டும், பாண்டியாறு - புன்னம்புழா, அவினாசி - அத்திக்கடவு மற்றும் ஆனைமலையாறு நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்' உள்ளிட்ட 35 தீர்மானங்கள் மட்டுமல்லாது, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.