`அழகிரியை தி.மு.க-வில் இணைக்க வேண்டும்!’ - கையெழுத்து இயக்கம் நடத்தும் ஆதரவாளர்கள்

தி.மு.க-வில் மு.க அழகிரியை மீண்டும் இணைக்கக் கோரி, அவரின் ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். 

அழகிரிக்காக கையெழுத்து இயக்கம்

அழகிரி தனி அமைப்பை தொடங்குவார் என்று அழகிரி ஆதரவாளர் இசக்கிமுத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது அவருடைய சொந்த கருத்து என அழகிரியின் மகன் துரை தயாநிதி கூறினார். இந்நிலையில், அழகிரி ஆதரவாளர்கள் அவரைத் தி.மு.க-வில் மீண்டும் இணைக்க வேண்டும் எனக் கோரி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். அண்ணா பிறந்தநாளான இன்று தி.மு.க-வில் மு.க.அழகிரியை இணைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள அழகிரி ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி, அதை தி.மு.க தலைமைக்கு அனுப்புவது என முடிவெடுத்துள்ளனர். 

மதுரை சத்ய சாயி நகரில் உள்ள அழகிரிக்குச் சொந்தமான தயா திருமண மஹாலில் தி.மு.க உறுப்பினர் அடையாள அட்டையுடன் வந்து ஆர்வத்துடன் கையெழுத்துப் போட்டு தி.மு.க தலைமை கழகத்துக்கு ஒரு வேண்டுகோள் கடிதத்துடன் தங்களது தி.மு.க உறுப்பினர் அட்டை நகல் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தி.மு.க உறுப்பினர் அட்டைகளின் நகல்களையும் இணைத்து அந்த வேண்டுகோள் கடிதத்தை பேக்ஸ் மூலமாகவும் தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கின்றனர். இதுதொடர்பாக அழகிரியின் ஆதரவாளர்கள் கூறுகையில், "அஞ்சா நெஞ்சர் மு.க.அழகிரியை தி.மு.க-வில் இணைப்பதால், கட்சிக்குப் பலம் சேரும். அவர் தனிக் கட்சி தொடங்கிக்கொள்வார், நாம் நிம்மதியாக இருந்துவிடலாம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். ஓர் ஆரோக்கிய அரசியலை அண்ணன் செய்ய நினைக்கிறார். அவருக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை இன்று தொடங்கிவிட்டோம்’’ என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!