வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (15/09/2018)

கடைசி தொடர்பு:20:20 (15/09/2018)

`அதிகாரிகள் துணை இல்லாமல் நடந்திருக்காது!’ - புழல் சிறை சம்பவம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்

சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்குத் துணைபோன சிறை அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலையை எதிர்க்கின்றனர் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாகர்கோவில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியைச் சுத்தப்படுத்தும் பணியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிறைக் கைதிகள் சொகுசு வாழ்க்கை அனுபவிப்பது குறித்து வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. அதிகாரிகள் துணை இல்லாமல் இது நடந்திருக்காது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யார் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து, தண்டனை வழங்க வேண்டும். ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து பேசும் அதே வேளையில் அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். அவர்கள் 7 பேரின் விடுதலையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. என்னைப் பொறுத்தவரை நீதிமன்றம் எடுக்கும் முடிவை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். தமிழக அரசின் முடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுகுறித்து ஆளுநர் சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசித்து வருகிறார். இதில் மத்திய அரசு குறுக்கீடு இல்லை. காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் உட்பட பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அவர்களின் விடுதலையை எதிர்க்கின்றனர்" என்றார்.