`7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு தயங்குகிறது!’ - திருமாவளவன்

திருமாவளவன்

'பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு தயங்குகிறது. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் 7 பேருக்கு விடுதலை கிடைக்கும் என்று மக்கள் எண்ணியதற்கு மாறாக மத்திய அரசின் செயல்பாடுகள் இருக்கிறது’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று  செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன், ``அரசியலமைப்புச் சட்டத்தின்படி பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்கலாம் என தமிழக அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. ஆனால், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்த பின்னரும் ஆளுநர் எதற்காக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். இதுதொடர்பாக ஆளுநரை தமிழக அரசு சந்தித்து முறையிட வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை  விடுதலை செய்ய பி.ஜே.பி அரசு தயங்குகிறது. பி.ஜே.பி அரசு ஆட்சிக்கு வந்தால் 7 பேருக்கு விடுதலை இருக்கும் என்ற எண்ணம் மக்களிடம்  இருந்த நிலையில், தற்போது உண்மை நிலை வேறாக இருக்கிறது.

ரகுராம் ராஜன் அறிக்கை குறித்து பிரதமர் மோடி வாய்த்திறக்கவில்லை. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 12 லட்சம் கோடி வாராக்கடன் மட்டுமல்ல, ஏற்கெனவே உள்ள 80% வாராக்கடனையும் பி.ஜே.பி தலைமையிலான ஆட்சியில் வசூலிக்கவில்லை. இதற்கு  பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும். நிலக்கரி விவகாரம் மட்டுமின்றி நீட் தேர்வு, ஒகி புயல் நிவாரண நிதி வழங்க வேண்டும், தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வந்த நிதியை மீண்டும் வழங்க வேண்டும் என பல்வேறு விவகாரங்களுக்கு தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால், மத்திய அரசு எதற்கும் உரிய பதில் அளிக்கவில்லை.

மத்திய அரசின் மேலாதிக்கத்துக்கு கட்டுப்பட்ட அரசாக தற்போதைய தமிழக அரசு இருக்கிறது. தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இஸ்லாமியர் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் வருமான வரித்துறை, சி.பி.ஐ சோதனைகள் அதிகமாக நடக்கிறது. சோதனை நடைபெறுகிறது என்பதால் குற்றவாளிகள் என்று அர்த்தம் கிடையாது. 

இந்தச் சோதனைகள் மூலம் தமிழக அரசை அச்சுறுத்துகிறார்கள் அல்லது மக்களிடம் அக்கட்சியின் மதிப்பை குறைக்க இதுபோன்ற சோதனைகளை நடத்துகிறார்கள் என்ற கருத்தும் இருக்கின்றது. குட்கா விவகாரத்தில் புகாருக்குள்ளான அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சியில் பதவி வழங்கியிருப்பது வியப்பை அளிக்கிறது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!