வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (15/09/2018)

கடைசி தொடர்பு:21:40 (15/09/2018)

`முகிலனைச் சந்திக்கச் செல்வோரை மிரட்டுவதா?’ - கொதிக்கும் ஆர்வலர்கள்

மதுரை மத்திய சிறைச்சாலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சந்திக்கச் செல்பவர்களை க்யூ பிரிவு போலீஸார் மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாகச் சுற்றுச்சூழல் ஆர்வலரான ராஜேஸ்வரி மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி-யிடம் புகார் மனு அளித்துள்ளார். 

முகிலன் ஆதரவாளர் - ராஜேஸ்வரி

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றபோது தொடரப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட முகிலன், சில மாதங்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரை தனிமைச் சிறையில் அடைத்து வைத்ததாகப் புகார் எழுந்தது. இது தொட்ர்பாக அவர் நீதிபதியிடம் முறையிட்டதால், நீதிபதிகள் சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள். 

இந்த நிலையில், முகிலனை சந்திக்கச் செல்பவர்களை க்யூ பிரிவு போலீஸார் அச்சுறுத்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலரான ராஜேஸ்வரி புகார் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் சிறைத்துறை டி.ஐ.ஜி-யிடம் அளித்துள்ள மனுவில், ``நான் சூழலியல் செயற்பாட்டாளராக உள்ளேன். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்றதற்காகக் கடந்த 360 நாள்களுக்கும் மேலாக முகிலன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஜூலை 1-ம் தேதி பாளையங்கோட்டை சிறையிலிருந்து அவர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 12-ம் தேதி அவரை சந்திக்கச் சென்றேன். அப்போது, மனுவை சரிபார்த்து கணினியில் பதிவேற்றம் செய்யும் சிறைத்துறை காவலர் என்னை உதவி மைய கட்டத்தில் உள்ள அறையில் இருக்கும் க்யூ பிரிவு காவலர்களிடம் அனுப்பி வைத்தார். அவர்கள் என்னைப் பற்றிய விவரங்களை சேகரித்ததுடன் அதை நோட்டில் எழுதி கையெழுத்துப் பெற்றுக்கொண்டனர். 

அதன் பின்னர், 14-ம் தேதி மீண்டும் முகிலனை சந்திக்கச் சென்றபோதும் சிறைக் காவலர்கள் என்னை க்யூ பிரிவு போலீஸாரிடம் சென்று பதிவு செய்து வருமாறு தெரிவித்தனர். அதற்கு நான் மறுத்துவிட்டேன். சிறைச்சாலை வளாகத்தின் உள்ளேயே பெண் என்றும் பாராமல் என்னை ஆண் காவலர்கள், அதுவும் சீருடை அணியாதவர்கள், சம்மன் எதுவும் இல்லாமல் விசாரணை நடத்துவது சட்ட விரோதமானது. இதுபற்றி நான் ஏற்கெனவே ஜெயிலரைச் சந்தித்து புகார் தெரிவித்துள்ளேன். 

முகிலனைச் சந்திக்கச் செல்பவர்களை மட்டுமே க்யூ பிரிவு போலீஸார் இது போன்று சிறைச்சாலை வளாகத்துக்கு உள்ளேயே வைத்து விசாரணை என்கிற பெயரில் அச்சுறுத்துகிறார்கள். இது சட்ட விரோதமான செயல். சிறைத்துறை விதிமுறைகளை மீறிய இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.