வெளியிடப்பட்ட நேரம்: 00:53 (16/09/2018)

கடைசி தொடர்பு:00:53 (16/09/2018)

நெல்லையில் கடற்கரையை சுத்தம் செய்த கல்லூரி மாணவர்கள்!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள மனோ கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உவரி கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள மனோ கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உவரி கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். 

கடற்கரை சுத்தம் - மாணவர்கள்

நெல்லை மாவட்டம்  திசையன்விளையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ , மாணவிகளும் சென்னையில் உள்ள இந்திய கடல்சார் நிறுவனமும் இணைந்து ’எங்களுக்காக அல்ல உங்களுக்காக’ என்ற தலைப்பில் உவரி கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் கலந்துகொண்டு தூய்மை பணிகளின் அவசியம் குறித்தும் நமது சுற்றுப்புறத்தையும் பொதுமக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்தும் மாணவ, மாணவிகளிடம் விளக்கினார். அதைத் தொடர்ந்து தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தார். உவரி கடற்கரை மற்றும் கடற்கரை அருகில் உள்ள கோயில் அருகே கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள், பேப்பர்கள், கழிவுப் பொருள்கள் ஆகியவற்றை மாணவர்கள் தூய்மைப்படுத்தினர். 

பொதுமக்களிடம் நெகிழிகளைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் மாணவ, மாணவிகள் எடுத்துக் கூறி விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார்கள். அங்கு சேகரிக்கப்பட்ட மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியே எடுத்துச் செல்லப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திசையன்விளையில் உள்ள மனோ கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள், இந்திய கடற்சார் நிறுவனத்தினர், ஊராட்சிப் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.