வெளியிடப்பட்ட நேரம்: 03:04 (16/09/2018)

கடைசி தொடர்பு:03:04 (16/09/2018)

11-ம் வகுப்பு மதிப்பெண் விவகாரம் - பள்ளிக்கல்வித்துறை முடிவை எதிர்க்கும் கல்வியலாளர்கள்

மாணவர்களின் மன அழுத்தத்தால் பதினொன்றாம் வகுப்பு வேண்டாம் என முடிவெடுத்ததாக காரணத்தைச் சொல்கிறார் அமைச்சர். தற்போது, புதிய பாடத்திட்டத்தாலும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் புதிய பாடத்திட்டமும் கைவிடப்படுமா?

இனி, உயர்கல்வி செல்பவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணே போதுமானது என்று அறிவித்திருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். இந்த முடிவு கல்வியாளர்களிடையே அதிர்ச்சியையும், தனியார் பள்ளி நிர்வாகிகளிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பாடத்தை நடத்தாமல் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை மட்டுமே நடத்தி மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். இந்த மாணவர்களே அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, கடந்த ஆண்டு, பதினொன்றாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இரண்டு ஆண்டுகளிலும் சேர்த்து படித்தால் மட்டுமே தேசிய அளவில் இடம்பிடிக்க முடியும் என்பதால் 11-ம் வகுப்பில் 600 மதிப்பெண் மற்றும் 12-ம் வகுப்பில்  600 மதிப்பெண்கள்  என இரண்டும் சேர்த்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. 

இதனடிப்படையில், பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று (15.09.2018) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 'மாணவர்களுக்கு மன அழுத்தம் போக்கும் வகையில் பிளஸ் டூ வகுப்பில் பெறப்படும் 600 மதிப்பெண் மட்டுமே உயர்கல்விக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று அறிவித்திருக்கிறார். 'இதற்காக, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்” அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கல்வியாளர்களிடம் பேசியபோது, “இந்த முடிவு தனியார் பள்ளிகளுக்குச் சாதகமாகும். இனி, தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பாடங்களை நடத்தாமல், பன்னிரண்டாம் வகுப்பு புத்தகத்தின் பாடத்தை மட்டுமே நடத்துவார்கள். இவர்களே அதிக மதிப்பெண் பெற்று, தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் இடம்பிடிப்பார்கள். ஆனால், தமிழக மாணவர்கள் தேசிய அளவில் உயர்கல்வி நிலையங்களில் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை மட்டும் படித்து இடம்பெற முடியாது.  பதினொன்றாம் வகுப்பு பாடத்தையும் சேர்த்துப் படித்தால் மட்டுமே உயர்கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் தகுதித்தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.

மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும்வகையில் பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் வேண்டாம் என முடிவெடுத்ததாக காரணத்தைச் சொல்கிறார் அமைச்சர். தற்போது, புதிய பாடத்திட்டத்தாலும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். இதனால் புதிய பாடத்திட்டத்தை வேண்டாம், பழைய பாடத்திட்டமே போதும் என்ற முடிவெடுக்கவும் அமைச்சர் தயாராக இருப்பதுபோல்தான் இருக்கிறது இந்த அறிவிப்பு” என்று வேதனையுடன் பகிர்ந்துகொண்டனர்.