தி.மு.க வின் நடைமுறைகளை பின்பற்றியே நாங்களும் டெண்டர்விட்டோம்- எடப்பாடி பழனிசாமி

முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் 110-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி

பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் இன்று(15.09.18) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் வந்தார். காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் வைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றைத் திறந்து வைத்தார். அங்கிருந்து தேரடி பகுதிக்கு வந்த பழனிசாமி ஆஞ்சநேயர் கோயிலில் வழிபட்டுவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களைத் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க ஐ.சி.யுவில் இருக்கிறது என ஸ்டாலின் சொல்கிறார். நாங்க எல்லாம் திடமாகத்தான் இருக்கிறோம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை நீங்கதான் லண்டன் போகிறீர்கள். இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று எத்தனையோ முறை போராட்டத்தை தூண்டிவிட்டார்கள். அது எடுபடவில்லை. இப்போது ஊழல் என்ற ஒன்றை கையில் எடுத்து இருக்கிறார்கள். இன்று முதலமைச்சர் நெடுஞ்சாலைத்துறையிலே ஊழல் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள். நீங்க என்ன நடைமுறைகளை பின்பற்றி டெண்டர் விட்டீங்களோ, அதே மாதிரிதானே நாங்களும் டெண்டர் விட்டிருக்கிறோம். இதற்காக நீதிமன்ற படியேறி இருக்கிறார்கள். அதற்கான விளைவுளை அவர்கள் எதிர்கொள்வார்கள்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!