வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (16/09/2018)

கடைசி தொடர்பு:10:56 (16/09/2018)

"ஃபேஸ்புக் போஸ்ட்டுக்கு 200 ரூபாய் எனக் கிளப்பிவிட்டது யார்?’’ தி.மு.க. ஐ.டி. விங் பதில்

அண்ணன் சீமானின் "நாம் தமிழர் கட்சி" இலங்கை தமிழர்களுக்காக நடக்குற கட்சி. இலங்கை தமிழர்கள் இங்கே வர முடியாது இல்லையா..அவர்கள் இணையத்தில் மட்டும்தானே இவர்களைப் பார்க்க முடியும்! அதனால் அவர்களுடைய 'டார்கெட் ஆடியன்ஸூக்கு' ஏற்ற இடத்தில வீரியமாக இருக்கிறார்கள். அதை தமிழ்நாட்டு அரசியலோட போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.

காலத்தின் தேவை கருதி ஒவ்வொரு அரசியல் கட்சியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சமூக வலைதளங்களில் பரபரப்பாகச் செயல்பட்டு வருகின்றன. 'ஐ.டி' விங்க் என்பது கட்சிகளின் கட்டாயம். இந்தச்சூழலில் சமீபத்தில் திமுக தங்களுடைய தகவல் தொழில்நுட்ப அணியின் முக்கிய நிர்வாகிகளை நியமித்தது. சமூக வலைதளங்களில் திமுக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து திமுக மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளராகப் பொறுப்பேற்று இருக்கும் புதுகை எம்.எம் அப்துல்லா அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தேன். 

"திமுகவிற்கு ஆதரவாக எழுதுகிறவர்களுக்கு ஒரு ஃபேஸ்புக் போஸ்ட்டுக்கு 200 ரூபாய் கொடுப்பதாகத் தொடர்ந்து இணையத்தில் பேசப்படுகிறதே.. இதன் பின்னணி என்ன?" 

"எங்கள் விமர்சனங்களைக் கருத்து ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் கிளப்பிவிடும் பச்சைப் பொய் தான் '200 ரூபாய் வாங்கிட்டு எழுதுறாங்க' என்பது! இதைக் கிளப்பி விட்டவர்கள் யாரென்று தெரியுமா? பிஜேபியினர் தான். 2014ல் பிஜேபி காசு கொடுத்து எழுத வைக்கிறதென்று திமுகவினர் கண்டுபிடித்து எழுதினார்கள். அதற்கு பதிலடியாக 2016 தேர்தலின் போது 'நாங்கள் இருநூறு ரூபாய் கொடுக்கிறோம்' என்கிற வதந்தியை பிஜேபியினர்தான் சமூக வலைதளங்களில் பரப்ப ஆரம்பித்தனர்." 

"தேர்தல் நேரத்தின்போது எடுக்கப்பட்ட இணைய சர்வேக்களில் திமுகவே முன்னணி வகித்தது. ஆனால், களநிலவரங்கள் வேறாக இருந்தன. 'இணைய ஆதரவு வெறும் மாயைதான்' என்று ஏற்றுக் கொள்ளலாமா?" 

"அண்ணா காலத்தில் இருந்தே திமுக என்றாலே 'படித்தவர்களின் கட்சி', 'அறிவாளிகளின் கட்சி' என்ற பெயர் உண்டு. திமுகவின் மேடைகள் 'மாலை நேரத்துப் பல்கலைக் கழங்கள்' என்ற பெயர் பெற்ற காலமும் உண்டு. அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக கற்றவர்கள் அதிகம் பயன்படுத்தும் இணையவெளியிலும் திமுக வழக்கம் போல ஆதிக்கம் செலுத்துகிறது. வெளிப்படையாகச் சொல்வதென்றால் இணையமும், களமும் வெவ்வேறாகத்தான் இருக்கின்றன! இவை இரண்டும் சமமாவதற்கு இன்னும் ஒரு பத்தாண்டுகள் பிடிக்கலாம்." 

"திமுகவிற்குப் பின்னால் உருவானது 'நாம் தமிழர் கட்சி'. ஆனால், அவர்களின் செயல்பாடு இணையத்தில் பலரையும் கவனிக்க வைக்கிறதே?" 

"அண்ணன் சீமானின் 'நாம் தமிழர் கட்சி' இலங்கை தமிழர்களைக் குறிவைத்து அரசியல் நடத்துகிறார்கள். இலங்கை தமிழர்கள் இங்கே வர முடியாது இல்லையா.. அவர்கள் இணையத்தில் மட்டும்தானே இவர்களைப் பார்க்க முடியும்! அதனால் அவர்களுடைய 'டார்கெட் ஆடியன்ஸூக்கு' ஏற்ற இடத்தில வீரியமாக இருக்கிறார்கள். அதை தமிழ்நாட்டு அரசியலுடன் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம்." 

அப்துல்லா, திமுக , ஐடி

" 'இணைய உபிக்கள்தான் திமுகவின் பலவீனம்' என்று சமூக வலைதளங்களில் அதிகமும் விமர்சிக்கப்படுகிறதே?" 

"திமுகவை எதிர்ப்பவர்கள்தானே தொடர்ந்து அவ்வாறு சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இணைய உடன்பிறப்புகளால் திமுகவிற்கு பலவீனம் என்றால் அதை இவர்கள் வெளியில் சொல்லிக் காட்டிக் கொடுக்காமல் தனது எதிரி பலவீனப்படுவதைப் பார்த்து ரசிக்கத்தானே செய்ய வேண்டும். மாறாக 'அய்யய்யோ இணைய திமுகவினரால் திமுக பலவீனமாகுதே!' என்று நீலிக் கண்ணீர் வடித்து புலம்ப வேண்டிய அவசியம் என்ன. இவர்கள் இப்படி எழுதக் காரணம் படிக்கும் நடுநிலையாளர்களைக் குழப்பவும், இணைய திமுகவினரை மனதளவில் தளர்ச்சியுறச் செய்யவுமே! ஆனால், இதெல்லாம் சாணக்கியன் காலத்து பழைய டெக்னிக். இது டெக்னாலஜி காலம். இப்போது இதெல்லாம் வேலைக்கு ஆகாது." 

"திமுகவின் பலவீனமே கொங்கு பெல்ட்தான். அதை சமாளிக்க சமூகவலைதளங்கள் வழியாக எதுவும் திட்டம் இருக்கிறதா?"

"கொங்கு பகுதி தொழில் வளம் மற்றும் விவசாயம் இரண்டும் சம அளவில் உள்ள பகுதி. தொழில் வளம் என்று எடுத்துக் கொண்டால் கொங்கு பகுதிகளில் சிப்காட்களை உருவாக்கியது துவங்கி, கோவையின் உள் கட்டமைப்பைப் பலப்படுத்தியது, திருப்பூர், ஈரோடு, கரூர், பகுதிகளில் நெசவுத் தொழிலுக்கு திட்டங்கள் வகுத்தது என்று பல்வேறு திட்டங்களை, சலுகைகளை திமுக அரசுதான் உருவாக்கியது! அதே போல இந்தியாவிலேயே முதன் முதலாக உரத்திற்கு மானியம் வழங்கியது, இலவச மின்சாரம் வழங்கியது என்று பல சலுகைகளைச் செய்ததும் திமுகதான்! இருப்பினும் கொங்கு பகுதி ஏனோ திமுகவிற்கு பின்னடைவான பகுதியாகவே இருக்கிறது. ஆனால், இப்போது அதில் மாற்றம் தெரிகிறது. கடந்த தேர்தலில் திமுக எதிர்க்கட்சியான நிலையிலும் கொங்கு மண்டலத்தில் கணிசமான அளவில் வெற்றி பெற்றுள்ளது. இது மாற்றத்திற்கான முதல் அடியாகவே நான் நினைக்கிறேன். அடுத்த தேர்தலில் கொங்கு பகுதியில் திமுக முழு வெற்றி பெறும் அளவிற்கு அந்தப் பகுதி மக்கள் அனைவரிடமும் இந்தச் செய்திகள் எல்லாம் சென்று சேரும் அளவிற்கு திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி தீவிரமாகப் பணி புரியும்." 

"மோடி வெற்றிபெற்றதற்கு கார்ப்பரேட் கம்பெனி ஒன்றின் பரிந்துரையுடன் சில மேலைநாட்டு உத்திகளை இணையத்தில் அவர்கள் பயன்படுத்தியாதாகச் சொன்னார்கள். இந்தத் தேர்தலில் திமுகவும் அதை பின்பற்றும் என செய்திகள் கசிகிறதே?" 

"திமுக எப்போதும் மக்களையும், தனது தொண்டர்களையும் மட்டுமே நம்பி வந்துள்ளது. அதை வைத்தே வளர்ந்தும் இருக்கிறது. இனி வரும் காலங்களிலும் இதை மட்டுமே நம்பும்...எந்தக் கம்பெனிகளையும் அல்ல!" 

"உங்களுடைய இணைய அணி, வரவிருக்கும் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டதா? இதன் செயல்பாடுகள் என்ன?" 

"இது தேர்தலுக்கான அணி அல்ல. பத்தாண்டுகளுக்கு முன்னர் பேரேடுகளை வைத்துப் புரட்டிக் கொண்டு இருந்த வங்கிகள் இன்று கணிணி மயமாகி விட்டன! ஊருக்கு ஊர் கோட்டா சிஸ்டம் வைத்து லெட்ஜரில் எழுதி முன்பதிவு டிக்கெட் வழங்கிய ரயில்வே துறை இப்போது கைபேசியிலேயே டிக்கெட்டைப் பெறும் வசதியை உருவாக்கி விட்டது. இப்படி ஒவ்வொரு துறையும் காலத்தால் மாறிவிட்ட நிலையில் கட்சிகளும் மாறவேண்டிய சூழ்நிலையால்தான் இந்த அணி உருவானதே தவிர தேர்தலுக்காக அல்ல! திமுகவின் மற்ற அணிகளைப் போல இந்த அணியும் தேர்தலுக்குத் துணை நிற்கும். மற்றபடி கட்சியைப் பலப்படுத்த தகவல் தொழில்நுட்பத்தை உருவாக்குவதும் பயன்படுத்துவதும் மட்டுமே இந்த அணியின் பிரதான நோக்கம்." 

"திமுகவிற்கு ஆதரவாக பேசும் இணைய உடன்பிறப்புகளுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் விஷயங்கள்?" 

"மின்மடல் குழுமங்கள் காலம் துவங்கி வலைப்பூக்கள், ஆர்குட், ஃபேஸ்புக், ட்விட்டர் காலம் வரை 18 ஆண்டுகள் இணையத்தில் இயங்குபவன் என்ற அனுபவத்தில் திமுகவினருக்கு மட்டுமல்ல... இணையத்தில் இயங்கும் அனைத்துக் கட்சி தோழர்களுக்கும் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். "நாம் அரசியல் நடத்துவது மக்களுக்காக! எனவே மக்களுக்குப் பிடிக்கும் மொழியில் பேசவும் மக்களுக்குப் பிடிக்கும் வகையில் நடக்கவும் செய்யுங்கள். ஆபாச மொழி தவிர்த்து அருவெறுப்பு உரையாடல் தவிர்த்து களமாடுங்கள். நாகரிக உலகிற்கு நீங்கள் முதல் வழிகாட்டியாக இருங்கள்".

 

திமுக ஐ.டி விங்க்கிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை கீழே கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


டிரெண்டிங் @ விகடன்