வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (16/09/2018)

கடைசி தொடர்பு:13:10 (16/09/2018)

அ.தி.மு.கவில் உள்கட்சித் தேர்தல்... தொண்டர்களை உற்சாகமாக்கும் திட்டங்கள்!

அ.தி.மு.கவில் உள்கட்சித் தேர்தல்...  தொண்டர்களை உற்சாகமாக்கும் திட்டங்கள்!

நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் அ.தி.மு.க பிரச்னை வெடித்துக் கிளம்பி நிற்கும் நிலையில், உள்கட்சி தேர்தலை நடத்தி விட வேண்டும் என்ற முனைப்பில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்கான பிளான்களுடன் அடுத்த கட்ட  நகர்வுகளுக்கு அவர்கள், ரெடியாகி வருகிறார்கள்.

''எம்.ஜி.ஆர்., ஜெயலலலிதா வழியில் அ.தி.மு.க-வை நடத்துகிறோம்'' என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் சொல்லி வருகிறார்கள். ''அ.தி.மு.க இரும்புக் கோட்டை; அதை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது'' என்று ஆளும்கட்சி அமைச்சர்களும் பொதுக்கூட்ட மேடைகளில் வீராவேசமாக முழங்கி வருகிறார்கள். ஆனால், இவர்களுக்கு டி.டி.வி.தினகரனும் முன்னாள் எம்.பி கோவை கே.சி.பழனிசாமியும் கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறார்கள். ''பொதுச்செயலாளர் பதவி ஒழிப்பு செல்லாது. கட்சி அடிப்படை விதிகளின் படி, அடிப்படை உறுப்பினர்களால்தான் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்'' என்று கோவை கே.சி.பழனிசாமி, இந்திய தேர்தல் ஆணையத்திடமும் டெல்லி உயர்நீதிமன்றத்திடமும் நியாயம் கேட்டு வருகிறார். இந்தப் பிரச்னையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரனும் வழக்கு போட்டு, ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி  பழனிசாமிக்கும் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். டி.டி.வி.தினகரன் மனுவை ஏற்றுக் கொண்டு விசாரணைக்கு ஒப்புதல் வழங்கி விட்டது டெல்லி உயர்நீதிமன்றம். கோவை கே.சி.பழனிசாமி வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இப்போது, 4 வாரம், அவகாசம் தரப்பட்டுள்ளது.


இதற்கு என்ன பதில் கொடுத்து, இந்த பிரச்னையில் இருந்து மீள்வது என்பதுதான் இப்போது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தலைவலியை கொடுத்துள்ளது. இதற்கிடையில், கட்சித்  தேர்தலை அமைப்புத் தேர்தலை நடத்தி விடலாம் என்ற முடிவுக்கு ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் வந்துவிட்டார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது உள்கட்சித் தேர்தலை நடத்தி முடித்துவிடுவதே பாதுகாப்பானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதுகுறித்து, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ''அ.தி.மு.க-வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 29.1.2018 முதல் தலைமைக் கழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. அதே போல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களும் 1.3.2018 முதல் தலைமைக் கழகத்தில் பெறப்பட்டு வருகின்றன. அதிமுக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை, மாவட்டச் செயலாளர்களும், கட்சியின் அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் நிர்வாகிகளும் மிகுந்த ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்'' என்று கூறி இருந்தனர்.

ஆனால், உறுப்பினர் சேர்க்கை - புதுப்பித்தலுக்கு கட்சியினர் அதிமுக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது அ.தி.மு.க தலைமை நிலையத்துக்கு பூர்த்தி செய்து வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பார்த்தாலே அப்பட்டமாகத் தெரிகிறது என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் சொல்கிறார்கள். எனவே, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி-க்கள், மாவட்ட செயலாளர்கள் மூலம் இந்தப் பணியை வேகப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முடிய இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் எப்படியாவது உள்கட்சி தேர்தலை நடத்தி விட வேண்டும் என்ற ஆலோசனையில் தீவிரமாக இறங்கி உள்ளார்கள். ஜனவரி பிறந்துவிட்டால், நாடாளுமன்றத் தேர்தல் வேலை தொடங்கி விடும். அப்போது, உள்கட்சி தேர்தலை நடத்தினால், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் பாதிக்கும் என்ற கவலையும் அவர்களுக்கு உள்ளது. எனவே, இந்த மாதத்திற்குள் உறுப்பினர் சேர்க்கையை முடித்து விட்டு உள்கட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளனர். பொதுச்செயலாளர் பதவி இல்லாத நிலையில், மற்ற அனைத்து பொறுப்புகளுக்கும் தேர்தல் நடைபெறும். 

இரட்டை இலை


இதற்கிடையில், உள்கட்சி தேர்தலை நடத்த விடமாட்டோம் என்று டி.டிவி.தினகரன் தரப்பில் சொல்கிறார்கள். அவர்கள், ''அம்மா (ஜெயலலிதா) காலத்தில் கடைசியாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுதான் உள்கட்சி தேர்தல் என்கிற அமைப்புத் தேர்தலை நடத்த வேண்டும். இப்போது, ஓ.பன்னீர்செல்வம் அணியினர், அவர்களுக்கு வேண்டப்படவர்களுக்கு மட்டுமே விண்ணப்பத்தை கொடுத்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி நியமனமே செல்லாது என்று இருக்கும் நிலையில் அவர்கள் நடத்தும் உள்கட்சி தேர்தலும் கேள்விக்குறிதான். இதையெல்லாம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்'' என்கிறார்கள். 

தொண்டர்களை உற்சாகப்படுத்த, உள்கட்சி தேர்தலை நடத்த, ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் திட்டமிடும் நிலையில் அவர்களுக்கு முட்டுக்கட்டைகளும் இன்னொரு பக்கம் ரெடியாகிக் கொண்டு இருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்