"சினிமால விவசாயிகள கெத்தாதாங்க காட்டணும். ஏன்னா...?!” - இயக்குநர் பாண்டிராஜ்

இந்த விதைகளைப் போட்டா சீக்கிரம் விளைச்சல் அதிகமா வரும்னு சொல்லி பல கார்ப்பரேட்காரங்க உள்ள வர ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க குடுக்குற விதை, உரம்னு எல்லாத்தையும் போட்டு மண்ணை மலடாக்கி வச்சிருக்கோம்.

கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்ச்சமூகத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகள் பற்றி அதிகம் பேசப்படுவது முக்கியமான மாற்றம். சினிமாவில் இதைச் சமீபத்தில் செய்த ஒரு படம் கடைக்குட்டி சிங்கம். கோடம்பாக்கம் பாக்ஸ்ஆபிஸிலும் கலெக்ஷன் அள்ளிய திரைப்படம். குடும்ப பிரச்னைகள்தான் மையம் என்றாலும், படத்தின் மிக முக்கியமான பேசுபொருளாக விவசாயமும் இருந்தது. படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில், விவசாயம் செய்ய நிலம் தேடிக்கொண்டிருந்த இயக்குநர் பாண்டிராஜை சந்தித்தேன். சினிமாவில் விவசாயிகள் எடுத்தாளப்படும் விதம், கடைக்குட்டி சிங்கத்தின் பின்னால் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் என நிறையவற்றைப் பகிர்ந்துகொண்டார். 

விவசாயி

” ‘கடைக்குட்டி சிங்கம்’  இயற்கை விவசாயத்தைப் பற்றிய படம்... உங்களுக்கு விவசாய அனுபவம் உண்டா?”

"அப்பா, அம்மா, அக்கா, மாமானு எல்லோரும் விவசாயம்தான் பார்த்துக்கிட்டிருக்காங்க. சின்ன வயசுல, காலையில நாலு மணிக்கு அப்பா எழுப்பிடுவார். அப்பாவுக்கு டீ வாங்கிட்டு போயி கொடுத்துட்டு, வயல்ல வரப்பு வெட்டுறது, பாத்தி கட்றதுனு வேலையெல்லாம் செய்திருக்கேன். விவசாயம்ங்குறது நம்ம உடம்புலயே ஊறிப்போற விஷயம்தான். விவசாய வேலை பார்த்துக்கிட்டிருந்தப்ப, கிணத்துல இருந்த தண்ணி வத்த ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் விவசாயம் பார்க்க வழியில்ல, அதனால சென்னைக்கு வந்துட்டேன். இப்போ என்னோட அண்ணனும் நானும் சேர்ந்து விவசாயம் செய்ய நிலம் தேடிக்கிட்டு இருக்கோம். கடைக்குட்டி சிங்கத்துலேயும் ஒரு டயலாக் இருக்கும் 'இப்பெல்லாம் எந்த கிணத்துலயும் தண்ணி இல்லடா'னு. நான் கண்ட மனிதர்கள், விவசாய அனுபவங்கள் எல்லாத்தோட பிரதிபலிப்புதான் இந்தப் படம்"

"இயற்கை விவசாயம் பற்றிய உங்கள் பார்வை...?”

 "முதல்ல எல்லாமே இயற்கை விவசாயம்தான் செய்துக்கிட்டிருந்தோம். பசுமைப் புரட்சிக்கு பின்னாலதான் ரசாயன விவசாயம்தான் வந்துச்சு. இப்ப இயற்கை விவசாயம் செய்யுறதே கஷ்டமா இருக்கு. பொதுவா நம்ம விவசாயத்துக்கு அடிப்படை தேவை கால்நடைகள்தானே. அதை முழுசா மறந்துட்டோம். அதை மறுபடியும் மக்கள்கிட்ட கொண்டு போகணும்னு நினைச்சேன். அதுக்காக நம்மாழ்வார் வீடியோக்களையும் பசுமை விகடன் புத்தகத்தையும் அடித்தளமா எடுத்துக்கிட்டுத்தான் இந்தப் படத்தை எடுத்தேன். வீட்டுக்கு வர்றவங்களுக்கு மரக்கன்று கொடுக்குறது, மூலிகை கஷாயம், விவசாய பிரச்னைனு நிறைய காட்சிகளுக்கு அடித்தளமும் அதுதான். அள்ளி எடுத்துக்குற அளவுக்கு தகவல் அதிகமா இருந்தது, அதுல நான் கிள்ளி மட்டும்தான் கொடுத்திருக்கேன்"

விவசாயி

”இன்றைய விவசாயத்தையும், விவசாயிகளையும் எப்படி பார்க்கிறீர்கள்?”

"இந்த விதைகளைப் போட்டா சீக்கிரம் விளைச்சல் அதிகமா வரும்னு சொல்லி பல கார்ப்பரேட்காரங்க உள்ள வர ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க குடுக்குற விதை, உரம்னு எல்லாத்தையும் போட்டு மண்ணை மலடாக்கி வச்சிருக்கோம். இப்போ மண்ணு நம்ம பேச்சைக் கேட்க மாட்டேங்குது. எவன் விதை கொடுத்தானோ அவன் பேச்சைத்தான் கேட்குது. இப்போ பல விவசாயிகள் இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பிக்கிட்டு இருக்காங்க. எங்க பாரம்பர்யத்தை கொண்டாடக் கூடாதுனு சொல்றதுக்கு நீங்க யாருங்குற நிலையிலதான் ஜல்லிக்கட்டு போராட்டமே நடந்துச்சு. இப்போ கொஞ்சம் கொஞ்சமா இளைஞர்களும் விவசாயத்தின் பக்கம் மாறிக்கிட்டு வர்றாங்க. தண்ணீர் விடலைனு கேட்குறதுக்கு பதிலா, ஒவ்வொரு மாவட்டத்துலயும் இருக்குற ஏரி, குளங்களை சீரமைச்சாலே தமிழ்நாட்டுல பாதி இடங்கள்ல விவசாயம் நடக்கும்"

"கடைக்குட்டி சிங்கம் படத்துக்குள்ள நடிகர் கார்த்தி வந்தது எப்படி?"

"முதல்ல கடைக்குட்டி சிங்கம் கதை எழுதிட்டேன். நாலு வருஷத்துக்கு முன்னால கார்த்திகிட்ட சொல்லிட்டேன். தலைப்பும் அப்பவே வச்சதுதான். சில சில காரணங்களால தள்ளிப்போயிடுச்சு. எங்க அப்பா கூட பிறந்தது மூணு அக்கா, என் மனைவி வீட்ல நாலு அக்கா, ஒரு தம்பி, இப்படி நாம பார்க்குற நபர்களை வச்சு எழுதுன கதைதான் அது. அதை சொல்றதுக்கு ஒரு பக்கத்து வீட்டுத் தம்பி மாதிரியான முகம் வேணும். அதேநேரத்துல பெரிய ஆளாவும் இருக்கணும். அப்படித்தான் கார்த்தி படத்துக்குள்ள வந்தார். கார்த்திக்கும் விவசாயத்தைப் பத்தி படம் பண்ணனும்னு ஒரு ஆசை இருந்துச்சு. அதனால குடும்பக் கதைக்குள்ள விவசாயத்தை கொண்டு வரலாம்ணு தோணிச்சு. இதுக்காக மூணு ஹீரோக்களை கேட்டோம், அவங்க நடிக்காதது இப்போ நல்லதா போச்சு. கார்த்தி கூடவே வர்ற சூரி கேடக்டரும் அப்படித்தான் உருவாச்சு. எல்லா ஊர்லேயும் மாமானு சொல்லிக்கிட்டு இப்படி ஒரு ஆளை நிச்சயமா பார்க்கலாம். கடைக்குட்டி சிங்கத்துல எல்லா சீன்லயும் ஏதோ ஒரு விவசாயம் சார்ந்த வேலைகள் நடந்துக்கிட்டேதான் இருக்கும். இனிமேல் நான் எடுக்கப்போற படங்கள்லயும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளை பேசப்போறேன்." 

”கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தி அரசை விமர்சிப்பது மாதிரியான வசனங்கள் வைக்கும்போது உங்களுக்கு ஏதும் குறுக்கீடுகள் இருந்ததா?”

"அந்த இடத்துல நாம என்ன சொல்லணும்ங்குறதுல உறுதியா இருந்தேன். எங்கேயுமே பொய் சொல்ல, அதனாலதான் அந்த மேடைக் காட்சிக்கு மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருந்தது. கார்த்தியும் அரசை விமர்சிக்குறது மாதிரியான வசனங்களை பேசுறப்போ, ஏன்னு ஒரு வார்த்தைகூட கேட்காமத்தான் பேசுனார். விவசாயத்தைப் பத்தி பேசணும்னு வந்தாச்சு, அதை தைரியமா சொல்ல வேண்டியதுதான். "

"ஏழ்மையான விவசாயி கதாபாத்திரங்கள்தான் தொடர்ந்து சினிமாவில் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கு மாறான ஒரு கதாபாத்திரத்தைக் காட்டணும்னு ஏன் முடிவு செய்தீர்கள் ?"

"விவசாயமும் ஒரு லாபகரமான தொழில்தான். விவசாயிகள்னாலே கோவணம் கட்டிக்கிட்டு இருக்காங்கனுதான் நினைக்குறது தவறு. விவசாயிகள் வெள்ளை வேட்டி, சட்டை, நகை எல்லாம் போட்டுக் காட்டணும்ங்குறதுதான் என்னோட ஆசை. விவசாயியா காட்டினாலும் கெத்தா காட்டுனா ஒண்ணும் தப்பில்லையே. விவசாயம் மூலம் யாரும் சம்பாதிச்சு வளரலையா என்ன? "

விவசாயி

”இயக்குநர் பாண்டிராஜ் இப்போ வீட்ல விவசாயி பாண்டிராஜா இருக்காராமே...?”

"வீட்ல இருக்குற இடங்கள்ல நானே கீரை, கத்தரிக்காய், தக்காளி, வெண்டை, வாழை, முருங்கைனு பல காய்கறிகள் பயிர் செய்துருக்கேன். என்னோட வீட்டுக்குத் தேவையான உணவை நானே விளைய வைக்குறதுல திருப்தி கிடைக்குது. வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தாங்கன்னா, அவங்களுக்கு வீட்ல இருக்குற வாழை இலையிலதான் சாப்பாடு. முருங்கை, தக்காளினு எல்லாமே வீட்டுத்தோட்டத்தில விளைஞ்ச காய்கறிகள்தான். பட வேலை நேரம் போக மீத நேரம் வீட்டுலயிருக்குற தோட்டத்துலதான். இதுக்கு இயற்கை உரங்களை என் ஊர்ல இருந்துதான் கொண்டு வர்றேன். கடந்த ரெண்டு வருஷமா நான் வீட்டுத்தோட்டம் வச்சிருக்கேன். இனி பெரிய அளவுல விவசாயம் செய்ய கிணத்தோட சேர்ந்து விவசாய நிலம் பார்த்துக்கிட்டிருக்கேன்." 

"இன்றைக்கு நிறைய திரைப்படங்கள் விவசாயிகள் பிரச்னையை மேலோட்டமாகத்தான் அணுகுகின்றன; கமர்ஷியல் காரணங்களுக்காக மட்டுமே இதைச் செய்கிறார்கள்; கடைக்குட்டி சிங்கமும் இப்படித்தான் என்று ஒரு விமர்சனமும் இருக்கிறதே?"

 "கடைக்குட்டி சிங்கம் விவசாயத்தை மட்டுமே முழுசா பேசுற படம் கிடையாது. அது ஒரு ஒரு விவசாயக் குடும்பத்தைப் பத்தின சினிமா. அதுல குடும்ப உறவுகளுக்கும், விவசாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கேன். கமர்ஷியல் சினிமாவுல விவசாயத்தை பத்தி எவ்வளவு காட்சிகள் வைக்க முடியுமோ, அவ்ளோ வச்சிருக்கோம். வெறும் வசனமா மட்டும் இல்லாம, உசிரா வளர்த்த காளையும், வாழையும் சாகுறப்போ, குடும்பமே வாடுறதாகட்டும், காலேஜ் ஃபங்ஷன்ல அரசை விமர்சிக்கிறதாகட்டும், ரேக்ளா பந்தயம், வீட்டுக்கும் விசேஷத்துக்கும் வர்றவங்களுக்கு மரக்கன்று கொடுக்குறது, மூலிகை கஷாயம் கொடுக்குறது, காய்கறிகளை பஸ்ல ஏத்த மாட்டேங்குறதுன்னு உட்பட பல விஷயங்கள் பேசியிருக்கோம். இன்னைக்கு விவசாயினு போட்டு பத்திரிக்கைகள் அடிக்குறாங்க. இதுவரைக்கும் செய்யாத ஒரு விஷயத்தை செய்ய வச்சிருக்கு, கடைக்குட்டி சிங்கம். இதெல்லாமும் என் படத்தின் வெற்றிதானே?"

Do you like the story?

Please Appreciate the Author by clapping!