வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (16/09/2018)

கடைசி தொடர்பு:14:55 (16/09/2018)

‘சாப்பாட்டு மன்னன்; சண்டைக் குதிரை’ - வைகோவை நினைத்து உருகிய துரைமுருகன்!

துரைமுருகன்

ஈரோட்டில் நடைபெற்ற ம.தி.மு.க முப்பெரும் விழா மாநில மாநாட்டில், வைகோ உடனான நட்பு குறித்து காமெடியாகவும், கசிந்து உருகியும் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் பேசியது மாநாட்டில் அப்ளாஸ் அள்ளியது.

பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா - ம.தி.மு.க வெள்ளிவிழா மற்றும் வைகோவின் பொதுவாழ்வு பொன்விழா ஆகிய மூன்றும் சேர்த்து முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. ஒரு சில தவிர்க்க இயலாத காரணங்களால் ஸ்டாலின் கலந்துகொள்ள முடியாமல் போக, அவருக்குப் பதிலாக பொருளாளர் துரைமுருகன் மாநாட்டில் கலந்துகொண்டு கலைஞரின் படத்தை திறந்து வைத்து பேசினார்.

துரைமுருகன்

“50 ஆண்டுகால நண்பனின் வாழ்க்கையைப் பற்றி வாழ்த்திப் பேச வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. சென்னை சட்டக் கல்லூரியில் நானும் வைகோவும் ஒன்றாக படித்தோம். மிக நெருக்கமான நண்பர்கள் நாங்கள் இருவரும். எங்கள் இருவரையும் வளர்த்து, உருவாக்கி, விலாசம் கொடுத்தவர் தலைவர் கலைஞர். கட்சியிலிருந்து பிரிந்த பின்னர் கொஞ்ச காலம் ஊடல் இருந்தது. ஆனால், எங்கள் நட்பில் என்றுமே ஊடல் இருந்ததில்லை. அரசியலில் மாறுபட்ட காலத்தில் நான் அவரை வெளுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால், வைகோ என்னைப் பற்றி ஒரு சொல் சொல்லியது கிடையாது. எனக்கும் வைகோவிற்கும் சாகிற வரை நட்பு என்கிற தொடர்பு இருக்கு” என்று டச்சிங்காக பேச ஆரம்பித்தார் துரைமுருகன்.

வைகோ

தொடர்ந்து பேசியவர், “வைகோ சாப்பிடுறதுல மன்னன். இவரு கூட ஒரு 6 பேர் இருப்பாங்க. அவங்க சாப்பிட ஆரம்பிச்சாங்கன்னா, அடுத்த ஆளுக்கு இலைக்கு சாப்பாடு வராது. அதனாலயே அவங்க கேன்டீனுக்கு சாப்பிட போனா, அங்க ஒன்னும் மிச்சமிருக்காதுன்னு நாங்க போக மாட்டோம். படிக்கும் போதே பதட்டமாகவும், படபடப்பாவும் தான் வைகோ இருப்பார். சண்டைக்கு போகத் துடிக்கும் குதிரையின் வேகம் இருக்கும். அப்படிப்பட்டவர் காலப்போக்கில் தமிழ்நாட்டின் தென்பகுதியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ‘வைகோ சொன்னால் சரியாகத் தான் இருக்கும்’ என்று கலைஞர் சொல்வார். அந்த அளவிற்கு வைகோவை நம்பினார் கலைஞர். அதேபோல, தன் உயிரை விட கலைஞரை அதிகமாக வைகோ நேசித்தார். அரசியல் மேடைகளில் வைகோ கர்ஜித்துப் பேசுவார் என்றால், இலக்கிய மேடைகளில் அவரது குரல் தாலாட்டும். 50 வருடங்களாக வைகோ எரிமலையின் மேல் நடந்து சென்ற காலம் தான் அதிகம். இனியாவது இனம் பார்த்துப் பழகு, களம் பார்த்து கால் வை” என வைகோவை அன்பாக எச்சரித்தார்.

வைகோ

இறுதியாய்ப் பேசியவர், “தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம், 5 ஆயிரம் கி.மீ நடந்து வந்திருக்கிறார். அது வீணாகும் என்று நினைக்கிறீர்களா!... வைகோ பாதம் பட்ட இடமெல்லாம் விதையாய் விழுந்திருக்கிறது. அது நிச்சயமாக நாளை மரமாகும். வரலாற்றில் வைகோவினுடைய தியாகம் நிலைத்து நிற்கும்” என்றவர் “1954-ல் தி.மு.க உறுப்பினர் கார்டு வாங்கியவன் நான். அப்படிப் பார்த்தால் எனக்கும் பொன்விழா தான். ஒரு பொன்விழாவே இன்னொரு பொன்விழாவை வாழ்த்துகிறது. நீ நூறு ஆண்டுகள் வாழ வேண்டும். அந்த நூற்றாண்டு விழாவில் நான் உன்னை வாழ்த்த வேண்டும்” என முடிக்க கைதட்டலில் ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது.