வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (16/09/2018)

கடைசி தொடர்பு:14:00 (16/09/2018)

விஜயபாஸ்கரை எடப்பாடி கைவிட்டாரா? - ரகசியம் உடைக்கும் தினகரன்

ஊழலில் பிரச்னையில் இருந்து காப்பாற்றச் சொல்லி தன்னிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கதறினார் என டிடிவி  தினகரன் கூறியுள்ளார்.
 
தினகரன்
புதுக்கோட்டை திருவப்பூர் அருகே உள்ள நத்தம்பண்ணையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுக்கூட்டம், அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்துக்காக சுமார் 60 கிலோமீட்டர் தூரம் உள்ள, புதுக்கோட்டை-திருச்சி சாலை வழிநெடுகவும் விதவிதமான கட் அவுட்டுகள் வைத்து அதகளப்படுத்தி இருந்தனர் அ.ம.மு.க-வினர். 
 
இந்தப்பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, சி.ஆர்.சரஸ்வதி, மாநில அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், திருச்சி மாவட்ட செயலாளர்கள் மனோகரன், ராஜசேகர், ஜெ.சீனிவாசன் சகிதமாக மேடை ஏறிய அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கியதுடன், மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
 
கூட்டத்தில் பேசிய டி.டி.வி.தினகரன், "தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி விரைவில் முடிவுக்கு வந்துவிடும். நமது  18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் விரைவில் வழங்கப்பட உள்ள தீர்ப்பு நமக்குச் சாதகமாக அமையும் என்கிற வகையில் இந்தக் கூட்டம் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வறட்சியில் தவிக்கிறது. கொள்ளிடம் வழியாக வீணாக ஆற்றில் கலக்கும் தண்ணீரை, புதுக்கோட்டைக்குக் கொண்டு வந்து, நீர்மட்டத்தை உயரச் செய்து, விவசாயத்துக்கு உதவ வேண்டும் எனப் புதுக்கோட்டை விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றார்கள். நிச்சயம் ஆட்சி மாற்றம் நடக்கும் அப்போது  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நலனுக்கான அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம்" என்றவர்,
 
"இந்தியாவுக்கே வழிகாட்டியாக விளங்கிய மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த ஊர் புதுக்கோட்டை, ஆனால் இப்போது ஒரு டாக்டர் இருக்கிறார். நல்ல டாக்டர் என்றால் அவர்களை நாம் குட் டாக்டர் என்போம், ஆனால் அந்த டாக்டர் குட்கா டாக்டராக இருக்கிறார்.  அமைச்சராக இருக்கும் டாக்டர் ஒருவர் தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார். அவர் வீட்டில் சோதனை செய்யாத துறைகளே இல்லை. ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில் நான் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டபோது, அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை வெற்றிபெற வைக்கத்தான் வேலை செய்கிறார் என அப்போது  நினைத்தேன். ஆனால் அவர் எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து, நான் வெற்றிப்பெற்றுவிட்டால் அவர்களுக்குச் சிக்கல் வந்துவிடும் என்கிற எண்ணத்தில் தேர்தலை நிறுத்தத் தான் பணியாற்றி இருக்கிறார் என்பது  பிறகுதான் தெரிந்தது.
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு 6 ஆயிரம் பணம் கொடுத்தும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. தற்போது திருப்பரங்குன்றத்திலும், திருவாரூரிலும் நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என அ.தி.மு.க. அமைச்சர்கள் பேசி வருகின்றனர். நாங்கள் மீண்டும் குக்கர் சின்னத்தில் போட்டியிடத்தான் போகிறோம். அங்கு நாம் வெற்றி பெறுவதுடன், அ.தி.மு.க. டெபாசிட் இழக்கச் செய்வோம்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மின் மிகை மாநிலமாக விட்டுவிட்டுச் சென்றார். ஆனால் மின்சார துறை அமைச்சர் தங்கமணி, மின்வெட்டைச் சரிசெய்ய தவறிவிட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா போன்ற மாநிலங்களில் நிலக்கரி வாங்கி வைத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு நிலக்கரி கேட்டு கடிதம் எழுதுகிறார்.
 
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு என்னுடைய குடும்பத்தினருடன் நடைப்பயிற்சி சென்றபோது, எதிரே வந்த ஒருவர் எனக்கு வணக்கம் வைத்தார். நானும் பதிலுக்கு வணக்கம் வைத்தேன். அருகில் சென்றபோது அவர், புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்பது தெரிந்தது. அப்போது அவர் என்னை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைவிட்டு விட்டார் என்று கூறி வருத்தப்பட்டார். உப்பு தின்றவன் தண்ணிக்குடித்து தானே ஆகவேண்டும். தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், வேலுமணி ஆகியோர் என்ன செய்வது என்று தெரியாமல் எப்போதும் தடுமாற்றத்துடன் பேசி வருகின்றனர். செல்லூர் ராஜு போலீஸ் பாதுகாப்பு இல்லாமல், வீதிகளில் நடக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். உதயகுமார் அம்மா சமாதியில் மொட்டைப் போட்டார். வேலுமணி அடித்த கொள்ளை ஊரறிந்து கிடக்கிறது. 800 கோடி ரூபாய் டெண்டர் கொடுத்ததில் ஊழல். 
 
துரோகிகளை அரசியலில் இருந்து ஓரங்கட்டத் தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பித்தோம். வருகிற தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றபடி முடித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க