கரூர் அட்சயாவை பார்க்க விஜய் வருவாரா? -எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

கேரள மழை வெள்ள பாதிப்புக்கு தனது இதய ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தில் கொடுத்து வைரலான கரூர் சிறுமி அட்சயாவை பார்க்க நடிகர் விஜய் வருவதாக சொல்லப்பட்டது. பத்து நாள்களை கடந்தும் அவர் வராமல் போக அட்சயா குடும்பம் ஏமாற்றம் அடைந்துள்ளது.

 
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது குமாரமங்கலம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, ஜோதிமணியின் மகள் தான் அட்சயா. சுப்பிரமணி சில வருடங்களுக்கு முன்பு தவறிவிட, தாய் கூலி வேலை பார்த்து சம்பாதிக்கும் வருமானத்தில் தான் குடும்பம் இயங்கி வந்தது. ஏழாவது படிக்கும் அட்சயாவுக்கு பிறந்தது முதல் இதயத்தில் பிரச்னை இருந்தது. கரூர் இணைந்த கைகள் என்ற அமைப்பின் உதவியோடு சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டி அட்சயாவுக்கு கடந்த வருடம் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்து வரும் நவம்பர் மாதம் இன்னொரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலையில், அதற்காக மறுபடியும் சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்ட தொடங்கியது இணைந்த கைகள் அமைப்பு. அந்த பணத்தில்தான் 5000 ரூபாயை கேரள வெள்ள நிவாரணத்திற்கு நிவாரணமாக கொடுத்து நெகிழ வைத்தார் அட்சயா. 

இந்த செய்தியை ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து அட்சயாவுக்கு இலவசமாக இதய ஆபரேஷன் பண்ண இந்திய அளவில் உள்ள பிரபல மருத்துவமனைகள் மற்றும் லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனை என்று 20க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இருந்து அழைப்பு வந்தது. இந்நிலையில், சகாயம் ஐ.ஏ.எஸ் அட்சயாவை அழைத்து பாராட்டினார். முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம் அட்சயாவை வீட்டிற்கே வந்து பாராட்டியதோடு, முதல்கட்டமாக அட்சயாவை பாராட்டி 25,000 கொடுத்தார். அதோடு, அட்சயாவின் ஆபரேஷன் செலவை தானே ஏற்றுக் கொள்வதாகவும் உத்தரவாதம் கொடுத்தார். 

இதற்கிடையே தான், 'நடிகர் விஜய் அட்சயாவை பார்க்க வருவதாக தகவல் வெளியானது. இதுபற்றி, இணைந்த கைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சாதிக் அலி, ``பத்து நாளைக்கு முன்னாடி எனக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைமை அமைப்பில் இருந்து போன் வந்தது. அப்போது பேசியவர்கள், 'விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து பேசுகிறோம். அட்சயா வீட்டிற்கு வழிகாட்ட முடியுமா?. இந்த தகவலை யாருக்கும் சொல்ல வேன்டாம். ஒரு முக்கிய நபர் இரண்டு நாள்களில் ஏதாவது நாள் இரவில் அட்சயாவை பார்க்க வருவார். யாருக்கும் தெரியாமல் அவரை அட்சயாவை வீட்டிற்கு நீங்க அழைச்சுட்டு போகனும்'ன்னு சொன்னாங்க. 

நானும், 'சரிங்க'ன்னு சொன்னேன். அதுக்கு பிறகு விசயத்தை சொல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தில் விசாரிச்சபோது, விஜய் தான் வர போறதா சொன்னாங்க. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டர் வீட்டிற்கு போனதுபோல் அட்சயாவை பார்க்க வரபோறதா சொன்னாங்க. அட்சயாவும் விஜய் ரசிகைங்கிறதால், 'அவர் நிதியெல்லாம் தரவேண்டாம். சும்மா வந்தாலே போதும். அந்த மகிழ்ச்சியிலேயே 100 சதவிகிதம் குணமாயிடும்னு' குஷியா சொன்னாங்க. ஆனா, பத்து நாளைக்கு மேல ஆயிட்டு. அவர் வர்றத்துக்கான எந்த அறிகுறியும் தெரியலை. விஜய் மக்கள் இயக்கத்துல விசாரிச்சப்ப சரியான பதிலும் கிடைக்கலை" என்றார். விஜய் மக்கள் இயக்கத்தில் விசாரித்தால், "விஜய் வர்றதா இருந்தது உண்மைதான். அந்த பயணம் ஏன் ரத்தானுச்சுன்னு தெரியலை" என்றார்கள்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!