வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (16/09/2018)

கடைசி தொடர்பு:11:59 (17/09/2018)

ஆ.ராசா எச்சரிக்கை, கடன் கடுப்பு..! பார்லர் பெண் தாக்குதல் பின்னணி

ஆ.ராசா எச்சரிக்கை, கடன் கடுப்பு..! பார்லர் பெண் தாக்குதல் பின்னணி

தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஒருவர் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அங்கிருந்த பியூட்டிஷனைக் காலால் மீண்டும், மீண்டும் எட்டி உதைக்கும் வீடியோ காட்சி, சில நாட்களுக்கு முன்பு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவரைக் காவல்துறை கைது செய்தது. இதனிடையே, அவர் வகித்த கட்சிப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்தது. "இந்தப் பிரச்னையின் பின்னணி எல்லாமே கொடுக்கல், வாங்கலுக்கானது அல்ல; ஒரு பெண்ணுக்காக நடந்த கூத்து என்று நமக்குத் தகவல் வரவே அதுபற்றி விசாரிக்கத் தொடங்கினோம்...

முன்னாள் கவுன்சிலர், பியூட்டிஷியன் பெண்

பெரம்பலூர் மாவட்டம் முத்துநகரைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். தி.மு.க-வைச் சேர்ந்த இவர், மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கும், வெங்கடேசபுரத்தில் 'மயூரி' என்ற பெயரில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் செந்தில்குமார் என்பவரின் மனைவி சத்யாவுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பழக்கம் இருந்துவந்துள்ளது. இதனிடையே, அந்த பியூட்டி பார்லரை விரிவுபடுத்துவதற்காக சத்யாவுக்கு 25 லட்சம் ரூபாயைக் கடனாகக் கொடுத்துள்ளார் செல்வகுமார். கொடுத்த கடனை செல்வகுமார் பலமுறை கேட்டுப்பார்த்தும் சத்யா தாமதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் கடுப்பான செல்வகுமார், பியூட்டி பார்லருக்குச் சென்று சத்யாவை காலால் எட்டி உதைத்துத் தாக்கியிருக்கிறார். இதில் காயமடைந்த சத்யா, சி.சி.டி.வி. புட்டேஜ் ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காவல் நிலையத்தின் முன்பு கூடியிருந்த செய்தியாளர்களைப் பார்த்ததும் வெளியே வந்த செல்வகுமார், 'தி.மு.க. நகரச் செயலாளர் பிரபாகரன்தான், என்னைத் திட்டமிட்டு பழிவாங்கி விட்டார். அரசியல் காழ்ப்புஉணர்ச்சியால் என்னைச் சிக்கவைத்து விட்டார்” என்றார்.

பியூட்டிஷியன் பெண்

இவ்விவகாரத்தின் பின்னணி என்ன என்று தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தோம். "பியூட்டி பார்லர் நடத்திட்டு வர்ற சத்யா சாதாரண பெண்ணல்ல; பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவள். காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளை மடக்கி, தன் கைக்குள் வைத்திருப்பவர். அவர்களை வைத்து பல காரியங்களைச் சாதித்துக் கொள்ளக்கூடியவர். இந்தநிலையில்தான், சத்யாவுக்கும், செல்வகுமாருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி, அவரிடம் இருந்து இதுவரை ரூ. 25 லட்சம்வரை கடன் வாங்கியிருக்கிறார் சத்யா.

சமீபகாலமாக செல்வகுமாரிடம் பணப்புழக்கம் இல்லாததைத் தெரிந்துகொண்ட சத்யா, பிறகு தி.மு.க. நகரச் செயலாளார் பிரபாகரனிடம் சரண்டர் ஆனார். இந்த விஷயம் செல்வகுமாருக்குத் தெரிந்ததும், சத்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி பிரபாகரனுக்குத் தகவல் தெரிந்ததும், அவரும், செல்வகுமாரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இந்த விவகாரம் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் கவனத்திற்குப் போனது. 'உங்களால கட்சிப் பேரு கெட்டுப் போனா, ரெண்டு பேரு மேலயும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியது வரும்' என இருவரையும் ராசா கண்டித்து அனுப்பினாராம்.

 

 

இந்த விவகாரம் அத்தோடு நிற்காமல் காவல்நிலையம்வரை சென்றது. ஒரு காலகட்டத்திற்கு மேல் கடுப்பாகிப் போன செல்வகுமார், தான் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு ஒதுங்கி விட முடிவுசெய்து, பார்லருக்குப் போனார். அப்போது, 'நான் எப்போ உங்கிட்ட பணம் வாங்குனேன். அதற்கு என்ன ஆதாரம் இருக்கு?' என சத்யா கேட்டுள்ளார். அதையடுத்தே இருவருக்கும் வாக்குவாதம் முற்றியிருக்கிறது. கடுப்பான செல்வகுமார், சத்யாவை காலால் உதைத்துத் தாக்கியுள்ளார். இது அங்குள்ள கேமராவில் பதிவாகியிருக்கிறது. செல்வகுமாரை எப்படியாவது சிக்க வைக்கவேண்டும் என்பதற்காகவே அந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. நான்கு மாதத்திற்கு முன்பு நடந்த இந்தச் சம்பவத்தை தற்போது பரப்ப வேண்டிய அவசியம் என்ன?”என்றனர் உள்ளுர் தி.மு.க-வினர்.

பியூட்டிஷியன் பெண் தாக்கப்பட்டபோது

இதுகுறித்து கேட்க சத்யாவை பலமுறை தொடர்பு கொண்டோம். ஒருவழியாகப் போனை எடுத்தவரிடம் தகவலைச் சொல்லி பேசினோம். முழுமையாகக் கேட்டுக்கொண்டவர், "நான் இப்போ ரொம்ப மன உளைச்சலில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன், ப்ளீஸ்...” எனச் சொல்லி போனைத் துண்டித்துவிட்டார். சில மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் சத்யாவைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. தி.மு.க. நகரச் செயலாளர் பிரபாகரனிடம் பேச முயற்சி செய்தோம். அவரும் போனை எடுக்கவில்லை.

பொதுவாக ஒரு கட்சியில் கோஷ்டிப் பூசல் காரணமாகவே, ஒருவரை ஒருவர் வீழ்த்த மாஸ்டர் பிளான் போடுவார்கள். ஆனால், ஒரு பெண்ணைக் காரணம்காட்டி காய் நகர்த்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!


டிரெண்டிங் @ விகடன்