வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (16/09/2018)

கடைசி தொடர்பு:19:10 (16/09/2018)

மேடையில் மோதிய முன்னாள் இந்நாள் நிர்வாகிகள்; ராமநாதபுரத்தில் அலறியடித்து ஓடிய பெண்கள்!

ராமநாதபுரத்தில் உலக பெண்கள் முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் நடந்த நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மோதல் ஏற்பட்டதால் பெண்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்.

ராமநாதபுரம் பெண்கள் விழாவில் மோதல்
 

தென் மண்டல உலக பெண்கள் முன்னேற்ற கூட்டமைப்பின் சார்பில் ராமநாதபுரம் தனியார் கூட்ட அரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த அமைப்பின் தலைவர் வெண்ணிலா முத்துக்குமரன் தலைமையில் நடந்த இந்த விழாவில் அமைப்பின் நிறுவனர் முத்துக்குமரன், ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் விழா துவங்கிய சிறிது நேரத்தில் ஏற்கனவே இந்த அமைப்பில் செயல்பட்டு வந்த முன்னாள் நிர்வாகிகள் சிலர் மேடையில் ஏறி தற்போதைய நிர்வாகிகளுக்கு எதிராக மோதலில் ஈடுபட்டனர். மேலும் மேடையில் இருந்த நாற்காலிகள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றைச் சூறையாடினர். இதனால் மேடையில் இருந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் விழாவிற்கு வந்திருந்த பெண்கள் அலறியடித்து கொண்டு விழா அரங்கை விட்டு ஓடினர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த பிரச்னை குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையில் வந்த போலீஸார் தகராறு செய்த பெண்களை அங்கிருந்து வெளியேற்றினர்.  நகரின் பிரதான பகுதியில் உள்ள கூட்ட அரங்கில் எழுந்த இந்த பிரச்னையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.