வெளியிடப்பட்ட நேரம்: 19:37 (16/09/2018)

கடைசி தொடர்பு:10:51 (17/09/2018)

 ``வைகோ நாடாளுமன்றத்தில் என்னருகில் நின்று உரையாற்றுவார்" -முப்பெரும் விழாவில் ஃபரூக் அப்துல்லா

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, ம.தி.மு.க-வின் வெள்ளி விழா மற்றும் வைகோவின் பொதுவாழ்வு பொன்விழா ஆகிய மூன்றையும் சேர்த்து முப்பெரும் விழாவாக ஈரோட்டில் நேற்று ம.தி.மு.க சார்பில் கொண்டாடப்பட்டது. 

வைகோ


இவ்விழாவுக்காக ஈரோடு - பெருந்துறை சாலையில் மூலக்கரை என்னுமிடத்தில் 25 ஏக்கரில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டது. இதில் பா.ஜ.காவை எதிர்க்கும் மனநிலையில் உள்ள அனைத்துக் கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்களை, ஒரே மேடையில் பேசவைத்தார் வைகோ.

இவ்விழாவுக்கு ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வைகோவின் அழைப்பை ஏற்று வருகை தந்திருந்தார். அப்போது உரையாற்றிய அவர்,  ``பாகிஸ்தான், இஸ்லாமிய மக்கள் பெருமளவில் கொண்ட நாடு என்பதால் அந்நாடு இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தே இருக்கும். அனைத்து மதங்களைக் கொண்டிருந்தாலும் எந்த ஒரு மதத்கையும் சார்ந்து நிற்காமல், மதச்சார்பற்ற நாடாக இன்றுவரை இருந்து வரும் இந்தியாவுக்கு தற்போது ஆபத்து வந்துள்ளது, அதை நீக்குவதற்கு வைகோ நிச்சயமாகப் போராடுவார்" என்று தெரிவித்தார். 

மேலும், ``இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதாலேயே ஜம்மு - காஷ்மீர் மாநிலமானது விரும்பி இந்தியாவோடு இணைந்தது என்பதைக் குறிப்பிட்டவர், கடவுள் நம் அனைவரையும் ஒரே மாதிரிதான் படைத்திருக்கிறார். அப்படி இருக்கையில், மத்தியில் நிலவிவரும் சூழலானது நம்மிடம் உள்ள ஒற்றுமையைக் கெடுத்துவிடும்படியாக உள்ளது. அதனால் நாம் அனைவரும் ஒன்றெனக் கருதி தேசிய ஒருமைப்பாட்டையும், அமைதியும் நிலைநாட்டுவோம். பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வைகோ போட்டியிட வேண்டும். போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் என் அருகில் நின்று உரையாற்றுவதைக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன். அதற்கு அவரது துணைவியார் வைகோவைக் கட்டாயப்படுத்த வேண்டும்” என்றார்.