திருமயம் காவல் நிலையத்தில் ஹெச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு! | FIR filed against H Raja in tirumayam police station

வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (16/09/2018)

கடைசி தொடர்பு:07:07 (17/09/2018)

திருமயம் காவல் நிலையத்தில் ஹெச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விநாயகர் சிலை ஊர்வலம் செல்லத் தடை விதித்த காவல்துறையினருடன் பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் ஹெச். ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஹெச்.ராஜா

 

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு இந்து முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு மெய்யபுரம் மகாமுத்து மாரியம்மன் கோயில் முன்பு விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று மதியம் 2 மணிக்கு விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை பா.ஜ.க வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார். இதையடுத்து மெய்யபுரம் வீதிகளில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாகச் செல்ல பொதுமக்கள் முயன்றனர். ஆனால், விநாயகர் சிலை ஊர்வலம் ஊருக்குள் செல்லக்கூடாது என போலீஸார் இரும்புத் தடுப்புகள் போட்டுத் தடுத்து நிறுத்தினர். இதற்கு ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாகக் கூறி போலீஸார் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஹெச். ராஜா போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவல்துறையினர் அனைவரும் இந்துக்களுக்கு எதிரானவர்களாகவே இருப்பதாகக் கடுமையாகச் சாடினார். நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக அதிகாரி ஒருவர் எடுத்துக் கூறியபோது அவரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்த ராஜா, ஒவ்வொரு இந்து வீடு வழியாகவும் செல்வோம், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று சவால் விடுத்தார். அதையடுத்து போலீஸாரை கண்டித்து, மதுரை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி செல்வராஜ், வருவாய் அதிகாரி கோகிலா மற்றும் போலீஸார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் விநாயகர் ஊர்வலம் ஊருக்குள் செல்ல போலீஸார் அனுமதி வழங்கினர்.

இதையடுத்து விநாயகர் சிலை மெய்யபுரத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, மெய்யபுரத்தில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹெச்.ராஜா போலீஸாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் ஹெச்.ராஜா போலீஸாரிடம் உயர்நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறையையும் மிக மோசமாகப் பேசியிருக்கிறார். இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஹெச்.ராஜா, அந்த வீடியோவில் தனது பேச்சு எடுத்து எடிட் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஹெச். ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் காவல் நிலையத்தில் சட்டத்தை மதிக்காது பேசுதல், இரு தரப்பினரிடையே மோதல் உண்டாக்கும் நோக்கில் செயல்படுதல், போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர் மனோகரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹெச்.ராஜா மீது உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.