வெளியிடப்பட்ட நேரம்: 22:01 (16/09/2018)

கடைசி தொடர்பு:07:25 (17/09/2018)

``இரண்டரை ஆண்டுகளாக உபகரணங்கள் வழங்கவில்லை" - கோவை வேட்டைத் தடுப்புக் காவலர்களின் சோகம்!

கோவை மாவட்டத்தில் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு இரண்டரை ஆண்டுகளாக எந்த உபகரணங்களும் வழங்கப்படவில்லை.

வேட்டைத்தடுப்பு காவலர்கள்

வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதில் வேட்டைத் தடுப்புக் காவலர்களின் பணிதான் முதன்மையானது. ஆனால், ஊதியத்தில் தொடங்கி அடிப்படை வசதிகள் வரை எதுவுமே பூர்த்தியாகாமல்தான், அவர்கள் தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை வேட்டைத் தடுப்புக் காவலர்களின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், பணியின்போது உயிரிழப்பு ஏற்படும்போது, சீருடை பணியாளர்களுக்கு வழங்குவதைப் போல சலுகைகள் வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். ஒவ்வோர் மாதமும் ஊதியத்தை 1  முதல் 5-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். அதேபோல, ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக பணியாற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு சிறப்புச் சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும்.

குறிப்பாக, சீருடைகள், காலணிகள், டார்ச் லைட்கள், பை, தண்ணீர் பாட்டில்கள், மழை கோட், பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் வழங்க வேண்டும். உணவு, பெட்ரோல், செல்போன் செலவுகளுக்கு அலவன்ஸ்கள் வழங்க வேண்டும். அதேபோல, காப்பீடு, கல்வி உதவி, கடன் உதவி போன்றவை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கைகள், கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர், மாவட்ட அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ரங்கராஜ், ``எங்களுக்கு சீருடை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. பல இடங்களில் டார்ச் லைட் கூட வழங்கப்படவில்லை. வங்கிப் பிரச்னை காரணமாக, பலருக்கு  ஊதியம் வழங்குவதிலும் இழுபறி நீடிக்கிறது. இவற்றை எல்லாம் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.