வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (16/09/2018)

கடைசி தொடர்பு:07:34 (17/09/2018)

பணகுடி அருகே லோடு ஆட்டோ மீது மோதிய ஆம்னி பேருந்து - அண்ணன், தம்பி பலியான சோகம்!

தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைப்பது தள்ளிப்போவதால் பணகுடி அருகே அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது. லோடு ஆட்டோ மீது இன்று தனியார் பேருந்து மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து -பணகுடி

கன்னியாகுமரி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய சந்திப்புகளில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பணகுடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கப்படவில்லை. அந்த இடத்தில் பாலம் அமைக்கப்பட்டால் அதன் அருகில் உள்ள செங்கல் சூளைகளை எடுக்க வேண்டியதிருக்கும் என்பதால் பாலம் அமைக்கப்படுவது திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளதாக அப்போதே பொதுமக்கள் பேசிக் கொண்டனர். 

தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கப்படாததால், பணகுடியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடப்பதும் அதில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. அதேபோல, இன்று பணகுடியில் இருந்து வந்த லோடு ஆட்டோ நான்குவழிச் சாலையில் ஏறும்போது, அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியது. இதில், சரக்கு ஆட்டோவில் இருந்த 
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி புதூரைச் சேர்ந்த சகோதரர்களான பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

அமைச்சருடன் எம்.எல்.ஏ சந்திப்பு

தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்க வேண்டும் என்று ராதாபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான ஐ.எஸ்.இன்பதுரையிடம் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ள வேளையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை விமான நிலையத்தில் இன்பதுரை எம்.எல்.ஏ தற்செயலாகச் சந்தித்தார். அப்போது பணகுடி பகுதியில் மத்திய அரசு சார்பாக விரைவில் பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். விரைவில் பாலம் அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவே உள்ளது.