வெளியிடப்பட்ட நேரம்: 20:51 (16/09/2018)

கடைசி தொடர்பு:08:56 (17/09/2018)

நாமே நேரடியாக செக்கில் நல்லெண்ணெய் தயாரித்தால் எவ்வளவு செலவாகும்?

நாமே நேரடியாக மரச்செக்கில் எண்ணெய் தயாரித்தால் ஒரு லிட்டர் எண்ணெய் விலை 310 ரூபாய்தான்.

நாமே நேரடியாக செக்கில் நல்லெண்ணெய் தயாரித்தால் எவ்வளவு செலவாகும்?

னித வாழ்வுக்கு அவசியமான, ஆரோக்கியமான உணவு வகைகளில் எண்ணெய் மிக முக்கியமானது. இன்று கிடைக்கும் எண்ணெய்கள் பெரும்பாலும் கலப்படம் வாய்ந்த எண்ணெய்களாகவே இருக்கின்றன. அதனால் மரச்செக்கு எண்ணெய்களின் மீது மக்கள் கவனத்தை திருப்ப ஆரம்பித்துவிட்டனர். அதனால் இயற்கை அங்காடிகளின் பக்கமோ, அல்லது விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளிலும் மரச்செக்கு எண்ணெய்களை மக்கள் அதிகமாக வாங்கும் நிலை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அவற்றிலும் சில எண்ணெய்களில் கலப்படம் இருப்பதாகவும், விலை அதிகமாகவும் இருப்பதாக மக்கள் சொல்வதுண்டு. அதற்கு மாற்றாக விகடன் வாசகர் ஒருவர் தானே தயார் செய்த நல்லெண்ணெய் பற்றிய விளக்கங்களையும், அதைப் பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார். 

விகடன் வாசகரின் அனுபவம்

``என் பெயர் ரெங்க பாபு. தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்தவன். உணவுக்குத் தேவையான எண்ணெய்யை அதிகமாக வெளியில் இருந்துதான் வாங்கிக் கொண்டிருந்தேன். நம்பிக்கையான இடங்களில்தான் வாங்கிக் கொண்டிருந்தேன். இந்த ஒருமுறை நாமே உற்பத்தி செய்தால் என்ன என்ற யோசனை தோன்றியது. நேரடியாகக் கம்பத்தில் உள்ள விவசாயியின் தோட்டத்திலேயே 95 ரூபாய் என்ற விலையில் 34 கிலோ எள் வாங்கினேன். மொத்த பொருளின் மதிப்பு 3230. கம்பத்திலிருந்து என்னுடைய ஊருக்குக் கொண்டுவர ஆட்டோ வாடகையாக 100 ரூபாய் செலவானது. வாங்கிய எள்ளைத் தூசி, பொட்டு, பொக்கு நீக்கி, வெயிலில் காய வைத்து, செக்குக்குச் சென்று ஆட்டி வர ஆட்கூலி மொத்தமாக 200 ரூபாய். 34 கிலோ எள்ளை முழுவதுமாக காயவைத்து எடுத்ததில், கிடைத்தது மொத்தமாக 30 கிலோ எள்தான். இதனை ரோட்டரிச் செக்கில் ஆட்டக் கூலி (ஒரு கிலோவுக்கு ஆட்டுக் கூலி ரூபாய் - 14.00) மொத்தமாக 420 ரூபாய் செலவானது. எள்ளு ஆட்டும்போது பிழிதிறன் கிடைக்க நாட்டு வெல்லம் 2 கிலோ வாங்கிச் சேர்த்தேன். நாட்டு வெல்லம் (ஒரு கிலோ 240) 2 கிலோவுக்கு 480 ரூபாய். 

வீட்டிலிருந்து இரண்டு முறை செக்குக்குச் சென்று வர ஆட்டோ வாடகை 100 ரூபாய். ஆக மொத்தம் எள் வீடு வந்து சேர்வதற்கு 4530 ரூபாய் செலவானது. நல்லெண்ணெய் 12 கிலோ (சரியாக 13 லிட்டர்) 40% பிழிதிறன் அடிப்படையில் கிடைத்தது. பிண்ணாக்கு 20 கிலோ கிடைத்தது, அதைக் கிலோ, ரூபாய் 25 க்கு உடனே விற்றாகிவிட்டது. அந்த வகையில் வரவு ரூபாய். 500 ரூபாய் கிடைத்தது. மொத்த செலவிலிருந்து பிண்ணாக்கு விற்ற 500 ரூபாயைக் கணக்கிட்டால் மொத்த செலவு 4,030 ரூபாய். கிடைத்த நல்லெண்ணெய் 13 லிட்டர். இதன் அடிப்படையில் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் விலை 310 ரூபாயாகும். இங்கே முக்கியமான விஷயம், என்னுடைய எண்ணெய் மேல் கலப்படம் என்ற பயம் எப்போதுமே வராது. இனி ஒரு வருடத்துக்கு எண்ணெய் விலை ஏறினாலும், எள் விலை உயர்ந்தாலும் எனக்குக் கவலையில்லை. 

நல்ல எண்ணெய்

ஒரு வருடத்துக்கு, எங்கள் வீட்டுக்குத் தேவையான நல்லெண்ணெய்யை, நானே தயார் செய்திருக்கிறேன். அதன் செலவுக் கணக்கைத்தான் நண்பர்களுக்குத் தெரிவித்தேன். நான் சொல்லியிருக்கும் கணக்கில் ஆட்கூலியை குறைத்தால் இன்னும் செலவுக் கணக்கு குறையும். நாம் கைவிட்ட பாரம்பர்ய பழக்க, வழக்க நடைமுறைகள்தான் இதற்குக் காரணம். அதிகமாக விலை கொடுத்து எண்ணெய் வாங்கினால் மட்டும் ஆரோக்கியம் வந்து விடாது. நமது ஆரோக்கியத்தைப் பற்றி நாம்தான் கவலைப்பட வேண்டும். அதனால் முடிந்த வரைக்கும் நமது உணவுப் பொருள்களை நாமே உற்பத்தி செய்யப் பழகிக்கொள்ள வேண்டும்" என்றார். 

இது ஏதோ கிராமத்திற்கான நிலை மட்டுமல்ல, சென்னை போன்ற பெரு நகரங்களிலும் மரச்செக்குகள் வர ஆரம்பித்துவிட்டன. எனவே எண்ணெய் தேவைப்பட்டால் நீங்களே நேரடியாகப் பொருள்களை வாங்கியும் எண்ணெய் அரைத்துக்கொள்ளலாம். நமது ஆரோக்கியம் நமது கையில்தான் இருக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்