வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (16/09/2018)

கடைசி தொடர்பு:08:02 (17/09/2018)

``மக்கள் ஆதரவு இருக்கிறது... விடுதலை செய்வதுதான் நியாயம்!” - நல்லகண்ணு கருத்து

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.

நல்லகண்ணு

நாகர்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``தமிழகம் முழுவதும் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். ஆனால், மின் தட்டுப்பாடு உள்ளது. இதைச் சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு மின்சாரத்தைத் தனியார் மயம் ஆக்க முயற்சி செய்து வருகிறது. பேரறிவாளன் உட்பட7 பேர் விடுதலைக்கு அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் தாமதம் இல்லாமல் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். 27 ஆண்டுகள் சிறையில் இருக்கிறார்கள், விடுதலை செய்வதில் சட்ட சிக்கல் இல்லை. மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். ஆகவே அவர்களை விடுதலை செய்வதுதான் நியாயம்.

பா.ஜ.க பாசிச ஆட்சி குறித்து கோஷம் எழுப்பிய மாணவி மீது வழக்கு தொடரும் அரசுகள் எல்லை மீறிப் பேசும் ஹெச்.ராஜா போன்றோர் மீது வழக்கு தொடருவது இல்லை. மாநில அரசு அமைச்சர்கள் அனைவர் மீதும் குற்றச்சாட்டு இருக்கிறது. குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் பதவி விலக வேண்டும். தவறு செய்தவர்களை கைது செய்ய வேண்டும். தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிகிறது. ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் அடுத்த தேர்தலில் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதே தமிழக ஆட்சியாளர்களின் நோக்கம். தேர்தலில் கூட்டணிக்காக மத்திய அரசின் கைக்கூலியாக தமிழக அரசு செயல்படுகிறது" என்றார்.