புது மாப்பிள்ளைக்கு பெட்ரோலை பரிசாக அளித்த நண்பர்கள்

பெட்ரோல் விலை வரலாறு காணாத ஏற்றத்தில் சென்றுகொண்டிருக்கும் வேளையில் திருமணத் தம்பதிக்கு பெட்ரோலை பரிசளித்த சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது.

பரிசு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழபருத்திக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவருக்கும் நாகை மாவட்டம் செம்பியவேலன்குடி கிராமத்தைச் சேர்ந்த கணினி ஆசிரியை கனிமொழிக்கும் நேற்று குமராட்சியில் உள்ள அன்னை கோகிலாம்பாள் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்துள்ளது.திருமணத்துக்கு வந்த உறவினர்களும், நண்பர்களும் மண மக்களுக்கு பல்வேறு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருந்தனர்.அப்பொழுது மாப்பிள்ளை இளஞ்செழியனின் சென்னை நண்பர்கள் ஒருங்கிணைந்து 5 லிட்டர் பெட்ரோலை வாங்கி அதனை கேனோடு மணமேடையில் இருந்த மணமக்களுக்கு பரிசு அளித்துள்ளனர்.

திருமணத் தம்பதிக்கு பெட்ரோல் கேன் பரிசளித்ததைப் பார்த்த திருமணத்துக்கு வந்தவர்கள் குழம்பினார்கள். தம்பதிகளும் ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் முழித்துள்ளனர். பரிசளித்த நண்பர்கள் கூறும்போது, ``நாளுக்கு நாள் பெட்ரோல் விலை கடுமையாக ஏறி வரும் நிலையில் பரிசுப் பொருளாக பெட்ரோல் கொடுத்தால் புதுமணத் தம்பதிகளுக்கு உபயோகமாக இருக்கும்'' எனக் கொடுத்தோம் எனக் கூறியுள்ளனர். இதைக்கேட்ட திருமணத் தம்பதிகள் உட்பட அனைவரும் ஆச்சர்யத்துடன் சிரித்தனர்.  இதனால் திருமண மண்டபத்தில் சிறிது நேரம் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் பெட்ரோல் விலை குறித்தும், அதைப் பரிசாக வழங்கியது  குறித்தும் பரவலாகப் பேசினார்கள்.

பரிசு கொடுத்த சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் இந்தப் படத்தை சமூக  வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!