`மாலை போட்டதற்கு வழக்கு.. செருப்பு வீசியதற்கு...?!’ - பெரியார் இன்று இருந்தால்...! | What if Periyar lives today...

வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (17/09/2018)

கடைசி தொடர்பு:19:45 (17/09/2018)

`மாலை போட்டதற்கு வழக்கு.. செருப்பு வீசியதற்கு...?!’ - பெரியார் இன்று இருந்தால்...!

"மனிதனுக்கு மனிதன் செய்துகொள்ளும் திருமணத்தில் கலப்பு என்ன வந்தது? கலப்புத் திருமணமென்பதே ஆரியர்கள் வந்ததிலிருந்து வந்ததுதான்."

`மாலை போட்டதற்கு வழக்கு.. செருப்பு வீசியதற்கு...?!’ - பெரியார் இன்று இருந்தால்...!

வாட்ஸ் அப்பில் வரும் `ஷேர் செய்யுங்கள்’ காலத்தில் இருக்கிறோம். தானே சொன்னாலும் அதை அப்படியே நம்பாமல், அறிவாயுதத்தை ஏந்தச் சொன்ன பகுத்தறிவுக் கிழவர், இன்றைய சமகாலப் பிரச்னைகளைப் பார்த்தால் என்ன சொல்லியிருப்பார். இறந்துபோன அப்பாவோ, தாத்தாவோ செய்த சில விஷயங்களோடு தொடர்புள்ள சம்பவங்கள் நிகழும்போது, அப்பனும் தாத்தனும் இப்படித்தான் சொல்லியிருப்பார்கள் என்று சொல்வதைப் போல...

மாலைக்கு வழக்கு.. செருப்புக்கு?

தந்தை பெரியாரின் 140-ம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று.

அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. வழக்கம்போலவே எல்லா ஆண்டும் நடப்பதுதான் நடந்திருக்கிறது. இயலாமையுடன் கூடிய முட்டாள்தனத்தில் பெரியாரின் இந்தப் பிறந்தநாளுக்கும், அவரது சிலைகள் மீது செருப்புகளை எறிந்திருக்கிறார்கள்.

இன்று பெரியார் இருந்தால்

சென்னை அண்ணாசாலையிலுள்ள பெரியார் சிலை மீது செருப்பு எறியப்பட்டிருக்கிறது. இச்சம்பவத்தைக் கண்டித்து சென்னை, சிம்சன் பகுதியில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடையே பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், "மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழகத்தில் சங் பரிவார் அமைப்புகளின் ஆட்டம் அதிகரித்துவிட்டது. பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் நடவடிக்கைகள் சரியில்லை. பெரியார், அண்ணா, அம்பேத்கர் என அனைத்துத் தரப்பினரையும் அவர் விமர்சித்து வருகிறார். ஆனால், அவரைக் கைது செய்ய தமிழக அரசு மறுத்து வருகிறது. புதுக்கோட்டையில் காவல்துறையையும் நீதித்துறையையும் மிக மோசமாக விமர்சித்துள்ளார். அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். பெரியார் சிலையை அவமதித்த செயல் வெட்கக்கேடானது. இந்தச் செயல் திராவிட இயக்கங்களுக்கு விடுக்கப்பட்ட சவால். சிலையை அவமதித்த நபரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

2017-ல் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டு, பின்பு வெளிவந்த மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, `புழல் சிறைக்கு வெளியே உள்ள பெரியார் சிலைக்கும், அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்துப் பேசிய காரணத்துக்காக 124A பிரிவில் தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. 

மாலை போட்டுவிட்டு பேசியதற்குக் கைது செய்துவிட்டீர்கள். ஓகே பாஸ். வீரமாகச் செருப்பை விட்டு எறிந்துவிட்டுத் தெறித்து ஓடியிருக்கிறார் ஜெகதீசன் என்னும் வழக்கறிஞர். அவர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. ஆனால், அது தேசத்துரோக செயலாக ஏன் பார்க்கப்படவில்லை?

மீ டூ அர்பன் நக்சல்

`என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு’ என்பதுதான் பெரியாரின் நடத்தை.

இந்துத்துவ அரசியலுக்கு எதிராகக் குரல்கொடுத்த எழுத்தாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையில், `பிரதமர் மோடியைக் கொல்ல சதிசெய்தார்கள்’ என்று குற்றம் சாட்டப்பட்டு, எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுமான வரவர ராவ், சுதா பரத்வாஜ், கெளதம் நவலகா, அருண் ஃபெரைரா,  வெர்னான் கான்சால்வஸ் ஆகியோர்  `உபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ராஞ்சியில் ஆதிவாசிக் குழந்தைகளுக்காகப் பள்ளி நடத்தும் ஸடான்ஸ் ஸ்வாமி, கோவாவைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரும் அம்பேத்கரின் உறவினருமான ஆனந்த் டெல்டும்டே ஆகியோரின் வீடுகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளன. 

`பொதுவாக, ஒருவரை கைது செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை’ என்று இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ``ஜனநாயகத்தில் எதிர்ப்புக் குரல் என்பது பிரஷர் குக்கரில் இருக்கும் சேஃப்டி வால்வ் போன்றது. அது இல்லையேல் குக்கரே வெடித்துவிடும்’’ என்று கூறி, கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக் காவலிலேயே வைத்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். 

ஒடுக்கப்படும் தரப்பினருக்காகப் பேசினாலே தேச விரோத முத்திரை குத்தப்படும் இன்றைய சூழலில் என்ன சொல்லியிருப்பார் பெரியார்?

``தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பரம்பரை விரோதிகளாகிய உயர்ந்த சமூகத்தினரால் `தேசத் துரோகி’ என்றும் `சமூகத் துரோகி’ என்றும் `தேசாபிமானம் இல்லாதவர்’ என்றும் தூற்றப்படுகின்றவர்கள் எவரோ, அவர்களே சமூகத்தின் உண்மையான சமத்துவத்துக்கும், சுதந்திரத்துக்கும் பாடுபடுகின்றவர்கள் என்பதை உணரலாம்” என்றார் பெரியார். பெரியார் ஜனநாயகத்துக்கு எதிரானவர் அல்ல. தேசத்துரோகியல்ல.

அவர் சாதி நாயகத்துக்கு எதிரான பெரியார். மதநாயகத்துக்கு எதிரான பெரியார். பணநாயகத்துக்கு எதிரான பெரியார் (ப. திருமாவேலனின் ``ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?”) நூலிலிருந்து.

சாதி ஆணவப் படுகொலைகள்

``ஆணவப் படுகொலை” - சொன்ன நொடியில் பல பெயர்களை உடனடியாக நினைவுகூர முடியும் அளவுக்கு மோசமான சூழலில் இருக்கிறோம். சில பெயர்களைச் சொல்கிறேன். 

அபிராமி - மாரிமுத்து (தஞ்சை சூரக்கோட்டை), திவ்யா - இளவரசன் (தர்மபுரி), கோகுல்ராஜ் (ஓமலூர்), கண்ணகி - முருகேசன் (விருத்தாச்சலம்), விமலாதேவி - திலீப்குமார் (உசிலம்பட்டி), சங்கர் (உடுமலை), கச்சநத்தம் சாதிப் படுகொலைகள் - இந்தப் பெயர்கள் நம் மனதுக்குள் ஏற்படுத்தும் ஆங்காரச் சூடு, சாதி என்னும் மனிதவிரோதத்தின் கோரமுகத்தை நமக்குக் காட்டும்.

"மனிதனுக்கு மனிதன் செய்துகொள்ளும் திருமணத்தில் கலப்பு என்ன வந்தது? கலப்புத் திருமணமென்பதே ஆரியர்கள் வந்ததிலிருந்து வந்ததுதான். அவன்தான் ஆடு, மாடு, கழுதையைக் கட்டிக் கொண்டிருக்கின்றான் என்பதாக அவர்களுடைய புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள் போன்றவற்றில் காணப்படுகின்றன. இது அதுபோன்று மனித ஜீவனுக்கும், வேறு ஜீவனுக்கும் நடைபெறும் திருமணம் அல்ல. மனித ஜீவனுக்கும் மனித ஜீவனுக்கும் நடைபெறும் திருமணமேயாகும். இதில் கலப்பு என்று சொல்வதற்குப் பொருளே கிடையாது."

(13.6.1968 அன்று சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில், தந்தை பெரியார் ஆற்றிய அறிவுரை- `விடுதலை’ 4.7.1968.)

பெரியார்

பெரியார் இதைத்தான் சொன்னார், இப்படித்தான் இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருப்பார். ``இந்த நாட்டில் உண்மையிலேயே ஒரு மனிதன் பொதுத் தொண்டாற்ற வேண்டும் என்று கருதுவானேயானால், அவன் முதலாவதாகச் செய்ய வேண்டிய முக்கியத் தொண்டு சாதியை ஒழிக்கப் பாடுபடுவதும் மக்களின் இழி நிலையையும் மடமையையும் ஒழிக்கப் பாடுபடுவதும் ஆகும்."

(25-03-1961- அன்று கோவையில் பெரியாரின் சொற்பொழிவிலிருந்து)

"சாதி மதம், கடவுள் உணர்ச்சி ஆகியவற்றையெல்லாம் அடியோடு அழிப்பது என்பதை யாரும் சீர்திருத்த வேலை என்று சொல்ல முடியாது. தைரியமாய்ச் சொல்வதானால் நாம் அவற்றை ஓர் அழிவு வேலை என்பதாகவே கருதி நம்மையும் அழிவு வேலைக்காரர்கள் என்றே சொல்லிக்கொள்ள வேண்டும். ஆகையால்தான் நமது சுயமரியாதை இயக்கம் இதையே தனக்குத் தலையாய கொள்கையாகக் கொண்டிருக்கின்றது” என்று கேரளச் சீர்திருத்த மகாமாநாட்டில் பேசியிருக்கிறார்.

ஹெச் ராஜாவுக்கும், எஸ்.வி சேகருக்கும்

ஜோசப் விஜயோ, பெரியார் சிலையோ, உயர்நீதிமன்றமோ - எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவதூறுகளை அள்ளிக்கொட்டி `அட்மின் அசால்ட்’ செய்பவர் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. சாதியும், மதமும் தாய் தந்தையைப் போல என்று அதிரடி செய்து, பெண் பத்திரிகையாளர்களைக் குறித்து வந்த கீழ்தரமான ஸ்டேடஸை தேசியக் கொடி ஸ்மைலிகளைப் போட்டு பகிர்ந்தவர் எஸ்.வி சேகர். குற்றங்களை மட்டும் ஒப்புக்கொள்ளாமல் தொடர்ச்சியாக சமூக வலைதள சேவையாற்றி வருகிறார்கள் இவர்கள். இத்தனை விஷமங்களுக்கும் லைட்டாக ரியாக்ட் செய்கிறது நீதித்துறை.

1938-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புக் களத்தில் பெரியார் பெண்களை மறியல் செய்யத் தூண்டினார் என்று குற்றம் சுமத்தி அரசு வழக்குத் தொடர்ந்தது. வழக்கு 1938 டிசம்பர் 5, 6 தேதிகளில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதை எதிர்த்து வழக்காட்ட வேண்டுமென்று ராஜா சர். முத்தையா செட்டியார், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் ஆகியோர் பெரியாரிடம் கூறினர். ஆனால் பெரியார் மறுத்துவிட்டார். நீதிபதியிடம் மட்டும் ஓர் அறிக்கையை எழுதிக் கொடுத்தார்.

"நீதிபதியான தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர், இம்மாதிரிக் கோர்ட்டுகளில் நீதியை எதிர்ப்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். ஆகவே கோர்ட்டார் அவர்கள் தாங்கள் திருப்தியடையும் வண்ணம் எவ்வளவு அதிகத் தண்டனை தர முடியுமோ, பழிவாங்கும் உணர்ச்சி திருப்தியடையும் வரைக்கும் தண்டனை கொடுத்து, இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என அறத்திமிருடன் பேசியவர் பேராசான் பெரியார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close